×

யுஎஸ் ஓபன் டென்னிஸ்; வெற்றியுடன் தொடங்கினார் செரீனா மெட்வதேவ் முன்னேற்றம்

நியூயார்க்: தனது கடைசி போட்டித் தொடரான யுஎஸ் ஓபனில் விளையாடும் செரீனா வில்லியம்ஸ், முதல் சுற்றில் வெற்றியுடன் தொடங்கியுள்ளார். மகளிர் ஒற்றையர் பிரிவில் அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற வீராங்கனைகள் வரிசையில் 2வது இடத்தில் உள்ள செரீனா (23 பட்டம்), நடப்பு யுஎஸ் ஓபன் தொடருடன் ஓய்வு பெறப்போவதாக ஏற்கனவே அறிவித்துவிட்டார். அதனால் அவர் களமிறங்கிய முதல் சுற்று போட்டி, டென்னிஸ் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. முதல் சுற்றில்  மாண்டினீக்ரோ வீராங்கனை டான்கா கோவினிக் (27வயது, 80வது ரேங்க்) உடன் மோதிய செரீனா ( 6-3, 6-3 என நேர் செட்களில் வீழ்த்தி வெற்றிக் கணக்கை தொடங்கினார். இப்போட்டி 1 மணி, 40 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. அடுத்து 2வது சுற்றில் அவர் உலகின் 2ம் நிலை வீராங்கனை அனெட் கொன்டவெயிட்டை (26 வயது, எஸ்டோனியா) எதிர்கொள்கிறார். கனடா வீராங்கனை லெய்லா பெர்னாண்டஸ் தனது முதல் சுற்றில் 6-3, 6-4 என நேர் செட்களில் பிரான்சின் ஓஷேன் டோடினை வீழ்த்தினார்.

முன்னணி வீராங்கனைகள் மரியா சாக்கரி (கிரீஸ்), மேடிசன் கீஸ், கோகோ காப் (அமெரிக்கா), பியான்கா ஆண்ட்ரீஸ்கு (கனடா), ஹட்டாட் மயா (பிரேசில்), பார்போரா கிரெஜ்சிகோவா (செக்.) ஆகியோரும் 2வது சுற்றுக்கு முன்னேறிய நிலையில், ருமேனியா நட்சத்திரம் சிமோனா ஹாலெப் முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வி கண்டு ஏமாற்றத்துடன் வெளியேறினார். உக்ரைனின் டாரியா ஸ்னிகருடன் (20 வயது, 124வது ரேங்க்) மோதிய ஹாலெப் 2-6, 6-0, 4-6 என்ற செட் கணக்கில் 1 மணி, 40 நிமிடம் போராடி தோற்றார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் உலகின் நம்பர் 1 வீரரான ரஷ்யாவின் டானில் மெத்வதேவ் (26வயது), தனது முதல் சுற்றில்  6-2, 6-4, 6-0 என நேர் செட்களில்   அமெரிக்காவின் ஸ்டீபன் கோஸ்லோவை (24 வயது, 111வது ரேங்க்) வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார். இப்போட்டி 2 மணி, 1 நிமிடத்துக்கு நீடித்தது. ஆஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியோஸ், ஆண்டி மர்ரே (இங்கிலாந்து), பெலிக்ஸ் ஆகர் (கனடா), கேஸ்பர் ரூட் (நார்வே), பாப்லோ கரெனோ புஸ்டா (ஸ்பெயின்) ஆகியோரும் 2வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். முன்னணி வீரர்கள் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் (24 வயது, கிரீஸ்), டெய்லர் பிரிட்ஸ் (அமெரிக்கா), பாடிஸ்டா அகுத் (ஸ்பெயின்), ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரிங்கா (சுவிஸ்), நிகோலஸ் பாசிலாஷ்விலி (ஜார்ஜியா) ஆகியோர் அதிர்ச்சி தோல்வியுடன் வெளியேறினர்.

Tags : US Open Tennis ,Serena Medvedev , US Open Tennis; Serena Medvedev's progress started with a win
× RELATED அமெரிக்க ஓபன் டென்னிஸ்: செர்பியாவின் நோவக் ஜோகோவிச் சாம்பியன்