×

உரங்களை பதுக்கிவைத்து அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எச்சரிக்கை

சென்னை:  உரங்களை பதுக்கினாலோ, அதிக விலைக்கு விற்கும் கடைகளின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர்  எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் மானிய விலையில் வழங்கப்படும் உரங்களை அதிக விலைக்கு விற்றாலோ, பதுக்கல் செய்தாலோ, சம்பந்தப்பட்ட உரக்கடைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்படும். இருப்பினும், சில இடங்களில் உரங்களை அதிக விலைக்கு விற்பதாகவும், உரங்களுடன் விவசாயிகள் கேட்காத இதர இடுபொருட்களையும் சேர்த்து விற்பதாகவும் உரங்களை பதுக்கி வைப்பதாகவும் அரசுக்கு செய்திகள் வந்தன. உடனடியாக திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

இதற்காக  374 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு, கடந்த ஒரு வாரமாக 514 மொத்த உர விற்பனை கடைகள், 6,258 கூட்டுறவு மற்றும் தனியார் சில்லரை உர விற்பனை  மையங்கள், 106 உர இருப்பு கிடங்குகள், 38 கலப்பு உர உற்பத்தி நிறுவனங்கள், 16 மாவட்ட சோதனை சாவடிகள், 17 தொழிற்சாலைகள் ஆக மொத்தம் 6,949 இடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த திடீர் ஆய்வில், 195 உரக்கடைகளில் இருப்பு தகவல் பலகையின்றி உரவிற்பனை செய்தது, 70 உரக்கடைகளில் புத்தக இருப்புக்கும் உண்மை இருப்புக்கும் வித்தியாசம் இருந்தது, 36  கடைகளில் அனுமதி பெறாமல் உர விற்பனையில் ஈடுபட்டது, விற்பனை முனையக்கருவியில் பட்டியலிடாமல் விற்பனை செய்தது போன்ற விதிமீறல்கள் கண்டறியப்பட்டன.

உரக்கட்டுப்பாட்டு ஆணையின்படி, விதிமீறலில் ஈடுபட்ட இரண்டு உரக்கடைகளின் விற்பனை உரிமம் நிரந்தரமாகவும், 92 உரக்கடைகளின் விற்பனை உரிமங்கள் தற்காலிகமாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளன. 266 உரக்கடைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்சுகள் அனுப்பப்பட்டுள்ளன. நேற்றைய நிலவரப்படி யூரியா 65,300 டன்னும், டிஏபி 42,000 டன்னும், பொட்டாஷ் 30,200 டன்னும், காம்ப்ளக்ஸ் உரங்கள் 1,55,200 டன்னும் ஆக மொத்தம் 2,92,700 டன் உரங்கள் மாநிலம் முழுவதும் உள்ள தனியார் மற்றும் கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் உரங்கள் சீராக விநியோகம் செய்வதையும் அரசு கண்காணித்து வருகிறது. உர இருப்பு, விநியோகம் தொடர்பாக புகார் ஏதும் இருந்தால், விவசாயிகள் 93634 40360 அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். எனவே, அரசின் இத்தகைய நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறும், உர கட்டுப்பாட்டு உத்தரவுக்கு எதிராக, விதிமீறலில் ஈடுபடும் உரக்கடைகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.



Tags : Minister ,MRK ,Panneerselvam , Strict action will be taken if fertilizers are hoarded and sold at higher prices: Minister MRK Panneerselvam warns
× RELATED ஓபிஎஸ்சுக்கு ஓட்டு போடாத 7 பேருக்கு ஓட, ஓட வெட்டு: பொதுமக்கள் சாலை மறியல்