×

கடைசி ஓவரில் 15 ரன் தேவைப்பட்டாலும் அடித்திருப்பேன்: ஆட்ட நாயகன் ஹர்திக்பாண்டியா `கெத்து’

துபாய்: ஆசிய கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய 2வது லீக் போட்டி நேற்று துபாயில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசியது. முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் துவக்க ஆட்டக்காரரும் விக்கெட் கீப்பருமான முகமதுரிஷ்வான் மட்டுமே சிறப்பாக விளையாடி 43 (42) ரன்களை சேர்த்தார். அடுத்து 4வது இடத்தில் களமிறங்கிய இப்தார் அகமதும் 28 (22) ஓரளவுக்கு ரன்களை சேர்த்தார். பாபர் அசாம் 10 (9), பகார் ஜமான் 10 (6) ஆகியோர் அடுத்தடுத்து நடையை கட்டினர். இறுதிகட்டத்தில் பவுலர்கள் ஹரிஸ் ரௌப் 13 (7), தஹானி 16 (6) ஆகியோர் அதிரடி காட்டியதால் பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்களை சேர்த்தது. புவனேஷ்வர்குமார் 4, ஹர்திக் பாண்டியா 3, அர்ஷ்தீப்சிங் 2, ஆவேஸ்கான் 1 விக்கெட் எடுத்தனர்.

இதையடுத்து இலக்கை விரட்டிய இந்திய அணியில் ஓபனர்கள் ரோஹித் ஷர்மா 12 (18), கே.எல்.ராகுல் 0 (1) ஆகியோர் ஏமாற்றிய நிலையில் அடுத்து விராட் கோலி 35 (34), ஜடேஜா 35 (29), ஹர்திக் பாண்டியா 33 (17) ஆகியோர் சிறப்பாக விளையாடி அசத்தியதால், இந்தியா 19.4 ஓவர்களில் 148 ரன்களை சேர்த்து, 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. இந்தியா வெற்றிபெற கடைசி ஓவருக்கு 7 ரன்கள் தேவைப்பட்டபோது, வேகப்பந்து வீச்சாளர்களுக்கு கோட்டா முடிந்துவிட்டதால் இடது கை ஸ்பின்னர் முகமது நவாஸ் பந்துவீச வந்தார். அவரது முதல் பந்தில் ஜடேஜா போல்டானார். தொடர்ந்து தினேஷ் கார்த்திக் அடுத்த பந்தில் ஒரு ரன் எடுத்தார். அடுத்த பந்தை ஹர்திக் டாட் பால் ஆடினார். இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் அடுத்த பந்தில் சிக்ஸர் விளாசி அணிக்கு வெற்றியைப் பெற்றுக்கொடுத்தார்.

3 விக்கெட் மற்றும் 33 ரன்களையும் எடுத்து வெற்றிக்கு உதவிய ஹர்திக் பாண்டியா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அவர் கூறுகையில், “கடைசி ஓவரை ஒரு இடது கை ஸ்பின்னர், அதுவும் அனுபவமில்லா ஸ்பின்னர்தான் வீசப் போகிறார் என்பது தெரியும். அப்போது கடைசி ஓவருக்கு 7 ரன்கள் தேவைப்பட்டது. அந்த நேரத்தில் 15 ரன்கள் தேவைப்பட்டிருந்தாலும் அடித்திருப்பேன். ஏனெனில் கடைசி ஓவரில் எப்போதும் பேட்ஸ்மேனைவிட பந்துவீச்சாளர்தான் நெருக்கடியில் இருப்பார். அதுவும் அனுபவ ஸ்பின்னர் என்பதால் முழு நம்பிக்கை இருந்தது” எனக் கூறினார். ஆசிய கோப்பை  கிரிக்கெட்டிற்கு இன்று ஓய்வு நாள் ஆகும். எனவே இன்று போட்டி எதுவும் கிடையாது. அடுத்த போட்டியில் சார்ஜாவில் நாளை (செவ்வாய்) ஆப்கானிஸ்தான்-வங்காளதேச அணிகள் மோதுகின்றன.

முதல்முறை

இந்த ஆட்டத்தில் பாகிஸ்தானின் 10 விக்கெட்டுகளையும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களே வீழ்த்தினர். ஸ்பின்னர்கள் ஒரு விக்கெட்டும் எடுக்கவில்லை. 20 ஓவர் கிரிக்கெட்டில் ஓர் இன்னிங்சில் எதிரணியின் அனைத்து விக்கெட்டுகளையும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் முழுமையாக வீழ்த்துவது இதுவே முதல் நிகழ்வாகும். இதற்கு முன் ஆகஸ்ட் 7-ந் தேதி வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டி-20 போட்டியில் அந்த அணியின் அனைத்து  விக்கெட்டுகளையும் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் வீழ்த்தி சாதனை  படைத்திருந்தனர். அந்த ஆட்டத்தில் ரவி பிஷ்னோய் 4 விக்கெட்டுகளும், அக்சர்  படேல், குல்தீப் யாதவ், தலா மூன்று விக்கெட்களை எடுத்தனர். இதன் மூலம்,  சர்வதேச டி-20 வரலாற்றில் எதிரணியின் 10 விக்கெட்டுகளையும் சுழற்பந்து  வீச்சாளர்கள் வீழ்த்துவது இதுவே முதல்முறை என்ற சாதனையை இந்திய சுழற்பந்து  வீச்சாளர்கள் செய்திருந்தனர்.

Tags : Hardik Pandya ``Kethu'' , I would have scored even if I needed 15 runs in the last over: Man of the Match Hardik Pandya ``Kethu''
× RELATED கடைசி ஓவரில் 15 ரன் தேவைப்பட்டாலும்...