×

கொளப்பாக்கம் - ஊனமாஞ்சேரி இடையே சேறும், சகதியுமான பஞ்சாயத்து சாலை; சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

கூடுவாஞ்சேரி:  கொளப்பாக்கம் - ஊனமாஞ்சேரி இடையே சேறும், சகதியுமான பஞ்சாயத்து யூனியன் சாலையால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர்.
கொளப்பாக்கம் - ஊனமாஞ்சேரி சாலையில் மழைநீர் தேங்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதில் பள்ளம், மேடுகள் இருப்பது தெரியாமல் அதில் விழுந்து, எழுந்து செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் ஊனமாஞ்சேரி ஊராட்சியில் ஊனமாஞ்சேரி, கொளப்பாக்கம், சமத்துவபுரம், போலீஸ் அகாடமி, வசந்தாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இதில், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட பஞ்சாயத்து யூனியன் சாலையான ஊனமாஞ்சேரியிலிருந்து கொளப்பாக்கம் செல்லும் 2 கிலோ மீட்டர் தூரம் கொண்ட சாலை கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக குண்டும், குழியுமாகவும், சேறும், சகதியுமாகவும் உள்ளது. மேலும், சாலையோரத்தில் இரண்டு பக்கத்திலும் தனியார் அடுக்குமாடி குடியிருப்புகள் போட்டி போட்டு கட்டிடங்கள் கட்டியுள்ளனர். இதில், சாலையின் இரண்டு பக்கத்திலும் கால்வாய் வசதியும் இல்லை. இதில், சாலையை ஆக்கிரமித்து குடியிருப்புகள், கடைகள், வீடுகள், ஓட்டல்கள் ஆகியவை கட்டப்பட்டு வருவதால் தற்போது பெய்து வரும் மழையினால் மழைநீர் செல்ல வழியில்லாமல் சாலையிலேயே தேங்குகிறது.

இதனால், ஊனமாஞ்சேரியிலிருந்து கொளப்பாக்கம், வண்டலூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று படித்து வரும் 300க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்லும்போது வாகனங்கள், மழைநீர் மற்றும் சேற்றை அடித்துவிட்டு செல்கின்றனர். இதனால் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. மேலும், சாலையின் சீர்க்கேட்டினால் தி -நகரிலிருந்து ஊனமாஞ்சேரிக்கு வந்து செல்லும் மாநகரப்பேருந்து சரிவர இயங்குவதில்லை. இதனால், மாணவர்கள், வேலைக்கு சென்று வருவோர் மற்றும் வெளியூர்களுக்கு சென்று வருவோர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் கூறியும் கண்டுகொள்ளவில்லை. எனவே, இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : Kolappakkam ,Oonamancherry , A muddy and rutted panchayat road between Kolappakkam and Oonamancherry; Request motorists to adjust
× RELATED வண்டலூர் அருகே தனியார் குடியிருப்பு...