×

தண்டராம்பட்டு அருகே பயங்கரம் மகளின் திருமணத்துக்கு வராத மனைவியை கொன்ற கணவர்

தண்டராம்பட்டு: திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த புதூர்செக்கடி ஊராட்சி ஜம்போடை கிராமத்தை சேர்ந்தவர் பழனி(47). இவரது மனைவி ராணி(43). இவர்களுக்கு ராஜபாண்டி(24), சிவா(22) என்ற 2 மகன்கள், பரணி(21) என்ற மகள் உள்ளனர். ராணி வெளிநாட்டில் தங்கி வீட்டு வேலை செய்து வந்தார். கடந்த 2 மாதத்திற்கு முன் பழனியின் தாய் உடல்நலக்குறைவால் இறந்தார். இதனால் இறுதி சடங்கிற்கு  சொந்த ஊருக்கு வந்த ராணி இங்கேயே தங்கிவிட்டார்.இவர்களது மகள் பரணி, புதூரை சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்துள்ளார். கடந்த 22ம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த காதல் திருமணம் தாய் ராணிக்கு பிடிக்கவில்லை. இதனால் அவர் அதில் கலந்து கொள்ளாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.

தர்மபுரி மாவட்டம் கோட்டப்பட்டியில் உள்ள பரணியின் அக்கா  வீட்டில் நடைபெற உள்ள விசேஷத்திற்கு தேவையான பொருட்களை தானிப்பாடியில் உள்ள கடைகளில் நேற்று முன்தினம் ராணி வாங்கிக்கொண்டு  திரும்பினார். இதைக்கண்ட பழனி, ‘மகள் திருமணத்தில் கலந்து கொள்ளாமல் உனது அக்கா வீட்டு விசேஷத்திற்கு மட்டும் செல்கிறாயா? எனக்கேட்டு தகராறு செய்துள்ளார். வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த பழனி, கத்தியால் ராணியின் கழுத்தில் வெட்டியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்து இறந்தார். இது குறித்து தானிப்பாடி போலீசார் வழக்குப்பதிந்து பழனியை நேற்று கைது செய்தனர்.

Tags : Bhangaram ,Dandaramputtu , Payangaram near Thandaramptu, daughter's marriage, A husband who killed his wife
× RELATED மீஞ்சூர், பொன்னேரியில் பயங்கரம் அடுத்தடுத்த 2 ரவுடிகள் படுகொலை