×

முறையாக உரிமம் பெறாமல் இயங்கி வரும் தனியார் விடுதிகள், இல்லங்கள் உடனே உரிமம் பெறவேண்டும்: சென்னை கலெக்டர் அறிவுறுத்தல்

சென்னை: தனியார் இல்லங்கள் மற்றும் விடுதிகளின் தரங்களை உறுதிப்படுத்தும் பொருட்டு முறையாக உரிமம் பெறாமல் இயங்கி வரும் விடுதிகள் மற்றும் இல்லங்கள் உடனடியாக உரிமம் பெறுவதற்கு துரித நடவடிக்கை எடுக்குமாறு சென்னை கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு சிறார் மற்றும் மகளிருக்கான இல்லங்கள் மற்றும் விடுதிகள் முறைப்படுத்துதல் சட்டம் 2014ம் ஆண்டு நடைமுறைக்கு வந்துள்ளது. இச்சட்டத்தின்படி தனியாரால் நடத்தப்படும் சிறார் மற்றும் மகளிருக்கான இல்லங்கள் மற்றும் விடுதிகள் பதிவு செய்தல் மற்றும் உரிமம் பெறும் முறை ஆகியவற்றிற்கான நிபந்தனைகள் அரசால் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி பதிவு மற்றும் உரிமம் பெற வேண்டும் என இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது.

விடுதியின் உரிமம் பெற, தீயணைப்புதுறை சான்றிதழ், சுகாதாரத்துறை சான்றிதழ், கட்டிட உறுதித்தன்மை சான்றிதழ் மற்றும் படிவம் டி உரிமம் ஆகியவை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட கட்டிடத்தில் விடுதி நடத்தப்பட வேண்டும். மேலும் உள்ளுறைவோர் தங்குவதற்கு சிறார்களுக்கு தலா 40 சதுர அடி மற்றும் மகளிருக்கு தலா 120 சதுர அடி இடத்தினை ஒதுக்கீடு செய்து தருவதை விடுதி மேலாளர் உறுதி செய்ய வேண்டும். விடுதியில் (குளியலறை மற்றும் உடைமாற்றும் அறைகளைத் தவிர) சிசிடிவி கேமரா பொருத்தப்பட வேண்டும்.

பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான விடுதி காப்பகங்களில் விடுதி காப்பாளர் கட்டாயம் பெண்ணாகவும், விடுதி பாதுகாவலர் ஆண் அல்லது பெண்ணாகவோ இருக்க வேண்டும். விடுதி பாதுகாவலர் காவல் துறையினரால் பெறப்பட்ட நன்னடத்தை சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். விடுதியில் சேர்க்கை பதிவேடு, நடமாடும் பதிவேடு, விடுப்பு விடுமுறை பதிவேடு மற்றும் பார்வையாளர் பதிவேடு ஆகியவை கண்டிப்பாக பராமரிக்க வேண்டும்.
மேலும் இல்லங்கள் மற்றும் விடுதிகள் பதிவு செய்தல் மற்றும் உரிமம் பெற மாவட்ட சமுக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அணுகுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Chennai Collector , Private hostels and houses operating without proper license should get license immediately: Chennai Collector instructions
× RELATED கலைத்துறையில் சாதனை படைத்த கலைஞர்கள்...