×

ஆக்கிரமிப்பால் மீட்கப்பட்ட குளங்களில் நடைபயிற்சிக்கு சீரமைப்பு பணி தீவிரம்: மகிழ்ச்சியில் சின்னமனூர் பகுதி பொதுமக்கள்

சின்னமனூர்: சின்னமனூரில் பல ஆண்டுகளுக்கு மேல் ஆக்கிரப்பில் இருந்த விசுவன்குளம், சங்கிலித்தேவன் குளம் மீட்கப்பட்டு, நடை பயிற்சி பயில பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலை வரிசையில் சின்னமனூர் மிகவும் முக்கியம் பெற்றதாக விளங்கி வருகிறது. இங்குள்ள 27 வார்டுகளில் 80 ஆயிரம் மக்கள் தொகை உள்ளனர். மேலும் சின்னமதுரை சுற்றி 14 கிராம ஊராட்சிகளில் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து தினந்தோறும் 50 ஆயிரம் பேர் வரை இங்கு வந்து தங்களின் தேவைகளை பூர்த்தி செய்து திரும்புகின்றனர். அதேபோல் கேரள பகுதிகளில் இருந்து குமுளி வழியாகவும், கம்பம் மெட்டு வழியாகவும் இங்கு வருகின்றவர்கள், காய்கறிகள்,அரிசி,பருப்புகள், பலசரக்கு, மளிகை சாமான்கள் உட்பட மொத்த கொள்முதல் செய்து செல்கின்றனர்.

சின்னமனூர் ஏற்கனவே பேரூராட்சியாக இருந்த நிலையில் தரம் உயர்த்தப்பட்டு இரண்டாம் நிலை நகராட்சியாக இயங்கி வருகிறது. இங்கு நான்காயிரம் ஏக்கர் வயல் வெளிகளில் இருபோக நெல் சாகுபடியும் பொங்கல் தை திருநாளுக்கு சிறப்பு செங்கரும்பு, தென்னை, வாழை, திராட்சை, மானாவாரி பயிர்கள் உள்ளிட்ட விவசாயம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சின்னமனூரில் ஊருக்குள் எரசை பிரிவில் சுமார் 2 ஏக்கர் பரப்பில் விசுவன் குளமும், சின்னமனூர் சீப் பாலக்கோட்டை சாலையில் சொக்கநாதபுரம் கடந்து மின் நகர் அருகில் 3 ஏக்கரளவில் சங்கிலித் தேவன் குளமும் அமைந்துள்ளது.
இப்பகுதியில் உள்ள கரட்டுப்பகுதியில் இருந்து மழை காலங்களில் வெள்ளம் கரைபுரளும். முதலில் சங்கிலித்தேவன் குளத்தில் சென்று நிரப்பி, பிறகு மறுகால் பாயும் போது அதனை ஒட்டி ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் விஸ்வன் குளத்தில் நிறையும் வகையில் இரு குளங்களும் அடுத்தடுத்து இருக்கின்றன.

தொடர்ந்து பல ஆண்டுகளாக இந்த குளங்களில் மழைநீர் தேங்குவதால் நிலத்தடி நீர் ஊற்றெடுக்கவும், வீடுகளில் உள்ள கிணறுகளிலும், தோட்ட கிணறுகளிலும் மற்றும் குடிநீராகவும் இந்த இரு குளங்களில் தேங்குவதால் மக்களுக்கு பெரும் பங்கு வகித்து வருகிறது.

இந்நிலையில் கடந்த 50 ஆண்டுகளாக இரண்டு குளங்களிலும் கரைப்பகுதிகள் மற்றும் குளத்திற்குள்ளும் ஆக்கிரமித்து வீடுகளும், கடைகளும், குடிசைகளும் போட்டுக் கொண்டு பெரும் பகுதியை மறைத்து குளத்தை சுருங்க விட்டதால் மழைநீர் தேங்குவதற்கு பெரும் தடைபட்டது.

இந்த இரண்டு குளங்களுக்கு இடையில் உள்ள வாய்க்கால்கள் அனைத்துமே ஆக்கிரப்பு செய்து தற்போது வீடுகளாகவும் விவசாய நிலமாகவும் மாறி கிடக்கிறது. அதன் பின்பு இப்பகுதி குளங்களில் தண்ணீர் சிறிதளவு தேங்கியும், தேங்காமலும் வறண்ட நிலை காணப்பட்டது. இதனால் இப்பகுதி பசுமையே காணாமல் போய், குடிநீருக்கும், நிலத்தடி நீருக்கும் பெரும் சிக்கல் ஏற்பட்டது.

கடந்த பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் இரண்டு குளத்தை மீட்டெடுத்து அதனை மேம்படுத்த வேண்டும் என பலமுறை சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் அதிகாரிகளோ அதற்க செவி சாய்க்காமல் ஆக்கிரமித்தவர்களுக்கு துணை நின்றனர். இதனால் அதிமுகவினரே பெருமளவில் ஆக்கிரமிப்பு செய்தது டீக்கடை,பெட்டி கடைகளாக வைத்தனர்.

தொடர்ந்து ஆட்சி மாற்றத்தால் திமுக பொறுப்பேற்றுக்கொண்டு நடந்து வரும் ஆட்சியில் உயர்நீதிமன்றம் தமிழகத்தில் ஆக்கிரமிப்பில் சிக்கி உள்ள கண்மாய், குளங்களை மீட்டு நீர்நிலைகளை மேம்படுத்த வேண்டும் என உத்தர விட்டது. அதன்படி முதல்வர் மு.க.ஸ்டாலின் அதற்கான பரிந்துரை ஏற்று குளங்களில், கண்மாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை மீட்டு எடுத்து சீரமைக்க வேண்டும் என உத்தர விட்டார்.

ஏற்கனவே சின்னமனூர் நகராட்சியில் நகர் மன்ற தலைவர் அய்யம்மாள் ராமு துணைத் தலைவர் முத்துக்குமார் ஆகி யோர் தலைமையில் பொறுப்பேற்றனர். பொதுமக்கள் ஆக்கிரமிப்பில் இருக்கும் இரு குளங்களை மீட்டெடுக்க கோரிக்கை வைத்தனர்.

தொடர்ந்து நகர்மன்ற தலைவர்,கமிஷனர் ஆகியோர் ஆய்வு செய்து அளவீடு செய்தனர். நகராட்சி நிர்வாகம் சங்கிலி த்தேவன் குளத்திலும், விசுவன் குளத்திலும் இருந்த ஆக்கிரமிப்புகள் முழுவதும் ஜேசிபி இயந்திரத்தால் இடித்து அகற்றி அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்தனர். இரு குளத்தையும் உடனடியாக மேம்படுத்துவதற்காக சங்கிலித்தவன் குளத்திற்கு ரூ.1.30 கோடியும், விசுவன் குளத்திற்கு ரூ.73 லட்சமும் நிதி ஒதுக்கீடு செய்து தற்போது பணிகள் படுஜோராக நடந்து வருகிறது.

குறிப்பாக சின்னமனூர் பொதுமக்கள் சீப்பாலக்கோட்டை சாலையிலும் பாளையம் சாலையிலும் தேனி சாலையிலும் நடை பயிற்சி செய்கின்றனர். அப்போது போக்குவரத்து நெருக்கடியால் விபத்து ஏற்படுவதும் அதிகாலை மாலை நேரங்களில் பெண்களிடம் வழிப்பறி செய்வதும் இது போன்ற பல நிகழ்வுகள் அடிக்கடி நடைபெற்று வருகிறது.

இதனை கருத்தில் கொண்ட நகராட்சி நிர்வாகம் வழிப்பறிகளையும், விபத்துகளை தடுக்கவும், உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தும் வகையில் இரண்டு குளங்களிலும் கரைகளை பலப்படுத்தியும் சுற்றி அகன்ற கரைகளாக மாற்றி நடை பயிற்சி செல்லும் விதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குளத்தின் நான்குபுறம் கான்கிரீட் கரைகளும், குளத்தில் மழைநீர் அதிகளவு தேங்கிட தூர்வாரியும், தடுப்புகள் போடப்பட்டு பணிகள் செய்யப்பட்டு வருகிறது.
இதனால் சின்னமனூர் பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து வரவேற்றுள்ளனர்.

பொதுமக்கள் கூறுகையில், திமுக ஆட்சி பொறுப்பேற்றுடன் குளங்களை மீட்டெடுத்து இயற்கையை காப்பாற்றும் விதமாக அமைந்துள்ளது. இங்கு நடை பயிற்சியால் பொதுமக்களுக்கு ஆரோக்கியம் மேம்படும் வகையிலும் விபத்துக்கள், வழிப்பறியிலிருந்து தடுக்கும் முயற்சி மகிழ்ச்சியாக உள்ளது என்றனர்.

Tags : Chinnamanur , Restoration work intensifies for walking in ponds reclaimed by encroachment: Happy Chinnamanur residents
× RELATED சின்னமனூர் ஓடைப்பட்டி பொன்ராஜ் குளத்தில் பெயரளவு ஆக்கிரமிப்பு அகற்றம்