×

2-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு; கலெக்டர் தகவல்

திருவள்ளூர்: கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வௌியிட்ட அறிக்கை: 2020-21 மற்றும் 2021-22ம் கல்வி ஆண்டில் 12ம் வகுப்பில் 60 சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்த மாணவ, மாணவியருக்கு வேலைவாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பினை தாட்கோ மூலம் எச்.சி.எல். நிறுவனம் செயல்படுத்த உள்ளது. இத்திட்டத்தில் தேர்வு செய்யப்படும் மாணவ, மாணவிகளுக்கு முதலாம் ஆண்டில் எச்.சி.எல் நிறுவனத்தின் மூலம் பயிற்சி வழங்கப்படும். முதல் ஆறு மாதங்களுக்கு இணைய வழி மூலமாக பயிற்சிகள் நடத்தப்படும். பயிற்சிக்கு தேவையான மடிக்கணினி எச்.சி.எல் நிறுவனமே வழங்கும். அடுத்த ஆறு மாதத்தில் சென்னை, மதுரை, விஜயவாடா, நொய்டா, லக்னோ மற்றும் நாக்பூர் ஆகிய நகரங்களில் அமைந்துள்ள எச்.சி.எல். நிறுவனத்தில் நேரடி பயிற்சி அளிக்கப்படும். முதலாம் ஆண்டில் ஆறாம் மாதம் முதல் மாணாக்கர்களுக்கு மேற்படி நிறுவனத்தின் வாயிலாக ஊக்கத் தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.

2-ம் ஆண்டில் மாணாக்கர்களுக்கு 3 விதமான கல்லூரிகளில் தகுதியின் அடிப்படையில் பட்டப்படிப்பு பயில வழிவகை செய்யப்படும். அதன்படி ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள இந்தியாவிலேயே மதிப்பு மிக்க பிட்ஸ் பிலானி பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி டிசைன் மற்றும் கம்ப்யூட்டிங் பாடப்பிரிவில் சேர்க்கப்படுவார்கள். இப்படிப்பானது பி.டெக் படிப்பிற்கு சமமான படிப்பாகும். இந்த 4 ஆண்டு பட்டப்படிப்பினை எச்சிஎல் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டே படிப்பதற்கான வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். இக்கல்லூரியில் சேர்வதற்கு 12 ஆம் வகுப்பில் இயற்பியல் பாடத்தில் 60 சதவீதம் மதிப்பெண் பெற்று இருக்க வேண்டும்.  

அதேபோல் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சாஸ்தரா பல்கலைக் கழகத்தில் மாணாக்கர்களின் தகுதிற்கேற்ப எச்சிஎல் நிறுவனத்தில் வேலை வாய்ப்புடன் பிசிஏ 3 வருட பட்டப்படிப்பு படிப்பதற்கான வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். மேலும் உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள எமிட்டி பல்கலைக் கழகத்தில் 3 வருடம்  பிசிஏ, பிபிஏ மற்றும பி.காம் பட்டப்படிப்பு படிப்பதற்கான வாய்ப்பும் ஏற்படுத்தி தரப்படும். மேற்காணும் வேலை வாய்ப்புடன் கூடிய பயிற்சி பெறுவதற்கான தகுதிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராக இருத்தல் வேண்டும். 2020-21 மற்றும் 2021-22ம் ஆண்டு 12ம் வகுப்பில் கணிதம் மற்றும் வணிக கணிதம் பாடத்தில் மொத்த மதிப்பெண்களில் குறைந்தபட்சம் 60 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

இதில் தாட்கோவின் பங்களிப்பாக  எச்சிஎல் நிறுவனம் நடத்தும் நுழைவுத் தேர்வில் பங்கேற்பதற்கு திறன் வாய்ந்த நிறுவனங்கள் மூலம் மாணாக்கர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். ஒவ்வொரு மாணாக்கருக்கும் பயிற்சிக்கான கட்டணத் தொகையை தாட்கோவே ஏற்கும். பின்னர் தேர்ச்சி பெற்ற மாணாக்கருக்கு எச்சிஎல் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய ரூ.1.18 லட்சம் கல்வி கட்டணத் தொகையை முதல் 6 மாத பயிற்சி காலத்தில் தாட்கோ கல்வி கடனாக வழங்கும்.  தேர்வு செய்யப்பட்ட மாணாக்கர்களுக்கு நுழைவு திறனுக்கான 3 பாடப்பிரிவிற்கு கம்யூனிகேசன் ஸ்கில் அடிப்படை ஆங்கில அறிவு போன்ற பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்பட்டு பின்னர் இணையவழி வாயிலாக நுழைவுத் தேர்வு நடத்தப்படும்.

இத்தேர்வில் 3 பாடப்பிரிவுகளிலும் குறைந்தபட்சமாக 10 மதிப்பெண்ணிற்கு 4 மதிப்பெண் பெற்றால் போதுமானதாகும். மேலும், இத்திட்டம் தொடர்பான விபரங்கள் மற்றும் பதிவு செய்வதற்கு தாட்கோ இணையதளம் www.tahdco.com என்ற முகவரியில் அறிந்து கொள்ளவும். மேலும், மாவட்ட மேலாளர், தாட்கோ, திருவள்ளுர் என்ற முகவரியிலும், 044-27665539, 9445029475 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விவரங்களை அறியலாம்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags : Adi Dravida , Degree program with placement for Aditi Dravida and tribal students who passed 2nd class; Collector Information
× RELATED கொள்ளிடம் அருகே பழையாறு...