×

ராமநாதபுரம் மாவட்டத்தில் விற்பனைக்கு குவியும் குற்றால மலை பழங்கள்-துரியன் பழம் ரூ.600க்கு விற்பனை

சாயல்குடி : குற்றாலம் போன்ற மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் விளையக்கூடிய ரம்டான், மங்குஸ்தான், டிராக்கன் போன்ற மருத்துவ குணம் நிறைந்த பழங்கள் தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் அமோகமாக விற்பனை நடந்து வருகிறது. விலையை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

தென்காசி மாவட்டம், குற்றாலம் சீசன் ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட்,செப்டம்பர் மாதம் வரை இருக்கும். இங்குள்ள அருவிகளில் குளிப்பதற்காக வெளிநாடு, வெளிமாநிலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்வர். தென்காசி மட்டுமில்லாது திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை உள்ளிட்ட தென்மாவட்ட மாவட்ட மக்கள் அதிகளவில் சென்று வருவர்.

இதுபோன்று கேரளா, ஆந்திரா, கர்நாடக, புதுச்சேரி, மேற்குவங்கம், உத்திரபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட வெளிமாநிலங்கள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர். இவர்களின் முதல் தேர்வு அருவிகளில் குளிப்பதாக இருந்தாலும் கூட, அடுத்து அங்கு விற்பனை செய்யப்படுகின்ற மருத்துவ குணம் வாய்ந்த மலை பழங்களாக இருக்கும்.இதில் மங்குஸ்தான், ரம்டான், துரியன், டிராக்கன், பேரிச்சைங்காய், நாவல், பெரிய நெல்லி, வால்பேரிக்காய், சிவப்பு கொய்யா ஆகிய பழங்களை ஆர்வத்துடன் வாங்கி வருவர். கடந்த காலங்களில் அங்கு விற்பனை செய்யக்கூடிய அரியவகை பழங்கள் மற்ற ஊர் பகுதிகளில் கிடைப்பது அபூர்வமாக இருந்து வந்தது.

 ஆனால் கடந்த சில வருடங்களாக ராமநாதபுரம், கீழக்கரை, பரமக்குடி போன்ற நகர பகுதிகள், சாயல்குடி, முதுகுளத்தூர் உள்ளிட்ட பிற ஊரக பகுதிகளில் விற்பனைக்கு வந்துள்ளது.குற்றாலத்தின் ராஜா எனப்படும் குளிர்ச்சியை தரக்கூடிய மங்குஸ்தான் பழம் வயிற்று புண்ணை போக்க கூடியதாகவும், ரம்டான் பழம் கண்பார்வை குறைபாட்டை நீக்க கூடியதாகவும், துரியன், டிராக்கன் பழங்கள் மலட்டு தன்மை, ஆண்மை குறைபாட்டை போக்கும் என்று கூறப்படுகிறது.

இதனை போன்று நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடியதும், கண், சிறுநீரகம், வயிறு, மற்றும் உடலில் உள்ள முக்கிய உறுப்புகளுக்கும் ஆரோக்கியம் தரக்கூடிய பேரிச்சைகாய், நெல்லி மற்றும் சக்கரை நோய், மலச்சிக்கல் உள்ளிட்டவற்றிக்கு சிவப்பு கொய்யா, நாவல் பழம், வால் பேரிக்காய் உள்ளிட்ட பழங்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.இதில் ஒரு கிலோ எடையுள்ள மங்குஸ்தான், ரம்டான் பழங்கள், பேரிச்சைகாய் ஆகியவை தலா ரூ.350 முதல் 400 வரையிலும், துரியன் பழம் ரூ.500 முதல் 600 வரையிலும், சிவப்பு கொய்யா, நெல்லி, நாவல், வால்பேரிக்காய் தலா ரூ.80 முதல் 100 வரையிலும் விற்கப்படுகிறது.

பொதுமக்கள் கூறும்போது, குற்றாலத்தில் கிடைக்கின்ற அபூர்வமான மலை பழங்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் கிடைப்பது மகிழ்ச்சியாக உள்ளது, விலை அதிகமாக இருந்தாலும் கூட சீசன் பழம், மருத்துவ குணம் வாய்ந்த பழங்கள் என்பதால் வாங்கிச் செல்கிறோம் என்றனர்.வியாபாரிகள் கூறுகையில், ‘குற்றாலத்தில் கிடைக்கக் கூடிய மருத்துவகுணம் வாய்ந்த பழங்கள் இங்கு கிடைப்பதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

குற்றாலத்திலிருந்து சரக்கு வாகனங்களில் மதுரை வந்து, பழ மார்க்கெட்டிலிருந்து ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் வாங்கி வரப்படுகிறது. போக்குவரத்து தூரம் அதிகம் என்பதால் விலை அதிகமாக இருக்கிறது. விட்டமின்கள் நிறைந்த பேரிச்சைகாய், நெல், சிவப்பு கொய்யா ஆகியவை அதிகமாக விற்பனை நடக்கிறது.மங்குஸ்தன், ரம்டான், துரியன் பழங்கள் சீசனில் மட்டும் கிடைக்கக் கூடிய அபூர்வமாக கருதுவதால் சற்று விலை அதிகமாக இருந்தாலும் கூட, விலையை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர். இந்த அபூர்வ பழங்களின் சீசன் இன்னும் 3 வாரங்கள் மட்டுமே இருக்கும்’ என்றார்.

Tags : Ramanathapuram District ,Koortala Hill Fruits , Sayalkudi: Medicinal properties like Ramdan, Mangosteen, Dragon fruit grown in Western Ghats like Courtalam.
× RELATED ஆர்.எஸ்.மங்கலம் அருகே சேதமடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் அவதி