×

கள்ளக்குறிச்சி வழக்கில் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க கோரிய வழக்கை வேறு அமர்வுக்கு மாற்ற பரிந்துரை

சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் நீதி கேட்டு கடந்த 17ம் தேதி அங்கு போராட்டம் நடந்தது.இந்த போராட்டமானது கலவரத்தில் முடிந்தது. கலவரத்தின் போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரை தாக்கியதுடன் போலீஸ் மற்றும் பள்ளி நிர்வாகத்திற்கு சொந்தமான பேருந்து, கார், டிராக்டர் மற்றும் பள்ளியில்  பயிலும் மாணவர்களின் சான்றிதழ்கள் உள்ளிட்ட ஆவணங்களையும் கலவரக்காரர்கள் அடித்து நொறுக்கி தீ வைத்துக் கொளுத்தினர்.

இதுதொடர்பாக புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரங்களை கொண்டு கலவரத்தில் ஈடுபட்ட நபர்களை கண்டறிந்து சிறப்பு புலனாய்வு போலீசார் கைது செய்து வருகின்றனர். அப்பகுதியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். இந்நிலையில் இதில் அப்பாவிகளும் கைது செய்யப்பட்டுள்ளதால் அவர்களை அடையாளம் காணக் கோரியும், அவர்களுக்கு இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிடக் கோரியும், மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ரத்தினம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், மாணவி மரணம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆசிரியை கிருத்திகாவை அதே சிறையில் அடைக்கப்பட்டுள்ள பள்ளி செயலாளர் மிரட்டுவதாகவும், அதனால் அவரை உடனடியாக திருச்சி சிறைக்கு மாற்ற வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் சட்டவிரோதமாக சிறையில் அடைக்கப்படுவதை தவிர்க்க, கைதானவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் போது, அவர்களுக்கு தேவையான சட்ட உதவியை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு மூலம் வழங்க அனைத்து மாஜிஸ்திரேட்களுக்கும் அறிவுறுத்தும்படி உயர் நீதிமன்ற நீதித்துறை பதிவாளருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார். இந்த மனு நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஜெகதீஷ் சந்திரா அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் கோரிக்கையை ஏற்று, வழக்கை வேறு அமர்வுக்கு மாற்ற நீதிபதிகள் பரிந்துரைத்துள்ளனர்.

Tags : Kallakurichi , Recommendation to transfer the case seeking compensation to the illegally arrested persons in the Kallakurichi case to another session
× RELATED கள்ளக்குறிச்சி மதி மரண வழக்கில்...