×

உலக சாம்பியன்ஸ் செஸ் தொடர்; இறுதிச்சுற்றில் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா.! புள்ளிகள் அடிப்படையில் கார்ல்சன் சாம்பியன்

மியாமி: உலக சாம்பியன்ஸ் செஸ் தொடரின் கடைசி சுற்றில் உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை, இந்திய வீரர் பிரக்ஞானந்தா வீழ்த்தினார். ஆனால் இறுதிச் சுற்றில் தோல்வியடைந்த போதிலும் புள்ளிகள் அடிப்படையில் உலக செஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை, கார்ல்சன் தட்டிச் சென்றார். 17 வயதே ஆன பிரக்ஞானந்தா, ரன்னர் கோப்பையை கைப்பற்றினார். மியாமி நகரில் இந்திய நேரப்படி இன்று காலை நடந்த எஃப்டிஎக்ஸ் கிரிப்டோ சாம்பியன்ஸ் செஸ் தொடரின் கடைசி சுற்றுப் போட்டியில் உலகின் நம்பர் 1 வீரரான, நார்வேயை சேர்ந்த மேக்னஸ் கார்ல்சனும், சென்னையை சேர்ந்த பிரக்யானந்தாவும் மோதினர்.

முன்னதாக நடந்த 6 சுற்றுக்களின் முடிவில் பிரக்ஞானந்தா 13 புள்ளிகளுடன் 2ம் இடத்தை பிடித்தார். கார்ல்சன் 15 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தார். எதிர்பாராத விதமாக 6வது சுற்றில் பிரக்ஞானந்தா, போலந்து வீரர் கிரைஸ்டாஃப் டுடாவிடம் தோல்வியடைந்தார். இந்த தோல்வி அவருக்கு பெரும் பின்னடவை ஏற்படுத்தியது. இதனால் சாம்பியன்ஸ் கோப்பைக்கான கார்ல்சனுடனான இறுதிச் சுற்றில் பிரக்ஞானந்தா, தொடர்ச்சியாக 4 ரேபிட் கேம்களில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். இறுதிச் சுற்றில் 4 கேம்களில் இருவரும் தலா 2 போட்டிகளில் வெற்றி பெற்றனர். இதனால் 2-2 என்ற சமநிலையை எட்டியதால், டை பிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது. டைபிரேக்கரில் பிரக்ஞானந்தா, கார்ல்சனை வீழ்த்தி, இறுதிச் சுற்றில் 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

4 போட்டிகளில் வென்று கூடுதலாக ஒரு புள்ளி எடுத்திருந்தால், பிரக்ஞானந்தா, சாம்பியன் கோப்பையை கைப்பற்றியிருப்பார். இப்போட்டியில் தோல்வியடைந்த கார்ல்சன், புள்ளிகளின் அடிப்படையில் நடப்பு உலக செஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். இந்த வெற்றியின் மூலம் ரன்னர் கோப்பையை கைப்பற்றிய பிரக்ஞானந்தா, உலகின் நம்பர் 1 வீரரான கார்ல்சனை, இந்த ஆண்டில் மட்டும், 3வது முறையாக வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய கார்ல்சன் கூறுகையில், ‘‘இந்தப் போட்டியில் இருவருமே பதற்றமாக இருந்தோம். நான் ஆரம்பம் முதலே ஃபார்மில் இல்லை. ஒரு கட்டத்தில் இப்போட்டியில் தோல்வியடைந்தாலும், கோப்பையை கைப்பற்றி விட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அதன் பின்னர் கொஞ்சம் ரிலாக்சாக ஆடினேன்’’ என்று தெரிவித்தார்.

Tags : World Chess Series of Champions ,Pragnananda ,Carlson , World Chess Series of Champions; Pragnananda defeated Carlson in the final round. Carlson is the champion on points
× RELATED நியூசிலாந்துடன் முதல் ஓடிஐ இந்தியா அமோக வெற்றி: கோஹ்லி 93 ரன் விளாசல்