சின்சினாட்டி: அமெரிக்காவில் சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் நடந்து வந்தது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்றிரவு நடந்த பைனலில் 28 வயதான கரோலின் கார்சியா, செக் குடியரசின் 32 வயதான பெட்ரா கிவிட்டோவா பலப்பரீட்சை நடத்தினர். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய கார்சியா முதல் செட்டை 6-2 என எளிதாக கைப்பற்றினார். 2வது செட்டிலும் அதிரடி காட்டிய அவர் 6-4 என தன்வசப்படுத்தினார். முடிவில் 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற கார்சியா சாம்பியன் மகுடம் சூடினார்.
தரவரிசையில் 35வது இடத்தில் உள்ள கார்சியா, 25வது இடத்தில் உள்ள கிவிட்டோவாவை வீழ்த்த ஒரு மணி நேரம் 42 நிமிடம் எடுத்துக்கொண்டார். டென்னிஸ் வாழ்க்கையில் இது அவருக்கு 10வது டபிள்யூடிஏ பட்டமாகும். இதுபோல் ஆடவர் ஒற்றையரில் குரோஷியாவின் 25 வயதான பேர்னா கோரிக், 4ம் நிலை வீரரான கிரீசின் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் பலப்பரீட்சை நடத்தினர். முதல் செட்டில் கடும் போட்டி நிலவிய நிலையில் டைப்ரேக்கர் வரை சென்றது. இதனை 7(7)-6(0) என போர்னா கைப்பற்றினார். 2வது செட்டில் அதிரடி காட்டிய அவர் 6-2 என எளிதாக தன்வசப்படுத்தினார். முடிவில் 7(7)-6(0) என பேர்னா கோரிக் வெற்றிபெற்று பட்டம் வென்றார்.