×

குப்பை இல்லா மாவட்டமாக மாற்ற `நம்ம ஊரு சூப்பரு’ திட்டம் துவக்கம்-கலெக்டர் அம்ரித் தகவல்

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் குப்பைகளற்ற மாவட்டம் என்ற நிலையை எட்டும் நோக்கில் `நம்ம ஊரு சூப்பரு’ என்ற சிறப்பு விழிப்புணர்வு இயக்கம் துவங்கப்பட்டுள்ளது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.  நீலகிரி மாவட்டம் ஊட்டி தொட்டபெட்டா ஊராட்சியில் சுகாதாரம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை குறித்து பொதுமக்களிடையே கிராம அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நம்ம ஊரு சூப்பரு என்னும் சிறப்பு இயக்கம் துவக்க நிகழ்ச்சி நடந்தது.

 கலெக்டர் அம்ரித் தலைமை வகித்து நம்ம ஊரு சூப்பரு என்னும் சிறப்பு இயக்கத்தை துவக்கி வைத்து பேசியதாவது:தமிழக அரசால் திடக்கழிவு மேலாண்மை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் பல்வேறு முன்னெடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சுகாதாரமான வாழ்க்கைக்கு அவரவர்களின் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து கொள்வது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். திறந்தவெளி மலம் கழித்தல் அற்ற மாவட்டம் என்ற நிலையை எய்தியது போல குப்பைகளற்ற கிராமம் என்ற நிலையை விரைவில் எட்டிட அனைவரின் பங்களிப்பும் அவசியமான ஒன்றாகும்.

 மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் பொதுமக்களிடையே திடக்கழிவு மேலாண்மை குறித்து அவரவர்களுக்கு உரிய பொறுப்புகளை எடுத்துரைக்க வேண்டும். குப்பைகளை தரம் வாரியாக பிரித்து வெளியேற்றுவதில் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும். பொது இடங்களில் குப்பைகளை போடுவதால் ஏற்படும் தீமைகள் குறித்து அறிவுறுத்த வேண்டும்.

 பொதுமக்களாகிய ஒவ்வொருவரும் திடக்கழிவு மேலாண்மையின் முக்கியத்துவம் குறித்து முழுமையாக தெரிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
 சுற்றுச்சூழல் தூய்மையான கிராமங்களை அடையவும், வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடனும் நம்ம ஊரு சூப்பரு என்ற இயக்கம் கிராமப்புற சமூகத்தினரிடையே தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுகாதாரம், திட மற்றும் திரவகழிவு மேலாண்மை நடைமுறைகள் பற்றிய விழிப்புணர்வை கிராமப்புற மக்களிடையே ஏற்படுத்த வேண்டும்.

 இந்த சிறப்பு இயக்கம் வரும் அக்டோர் 2ம் தேதி வரை மாவட்டத்தில் பல்வேறு பிரசாரங்கள், செயல்பாடுகள் நடைபெற உள்ளது. இதனை கண்காணிக்க ஊராட்சி ஒன்றிய அளவில் மண்டல அலுவலர்களும், ஊராட்சி அளவில் பொறுப்பு அலுவலர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

 கிராமப்புற மக்களுக்கு சுகாதாரம் ஏற்படுத்தவும், சுற்றுசூழல் பாதுகாக்கவும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. தமிழ்நாடு ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், பள்ளி கல்வித்துறை, உயர்கல்வித்துறை, வருவாய்த்துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நலம், சமூக நலம் மற்றும் மகளில் உரிமைத்துறை, வனத்துறை, உணவு பாதுகாப்புத்துறை, சுற்றுலா, இந்து சமய அறநிலையத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல், பொதுப்பணி, மாசுகட்டுபாட்டு வாரியம் உள்ளிட்ட துறை அலுவலர்களுக்கு இது குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  தெளிவான விழிப்புணர்வை ஏற்படுத்த மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக கிராமப்புற மக்களுக்கு குடிநீர், மரம் வளர்ப்பு, கழிப்பறை கட்டுவது, திடக்கழிவு மேலாண்மை போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

 நம்ம ஊரு சூப்பரு என்ற இயக்கத்தின் மூலம் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முறையான மேற்கொண்டு சுகாதாரம் காத்தல், மக்கும் குப்பையில் இயற்கை உரம் தயாரித்தல், சோக்பிட் அமைத்தல், தடுப்பணை, பண்ணை குட்டை உட்பட பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.  இதுபோன்ற திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி திடக்கழிவு மேலாண்மை திட்டம் முறையாக செயல்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ெஜயராமன், மகளிர் திட்ட இயக்குநர் ஜாகீர் உசேன், ஊராட்சிகள் உதவி இயக்குநர் சாம் சாந்தகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நந்தகுமார், சிவக்குமார், தொட்டபெட்டா ஊராட்சி தலைவர் ஜவகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Amrit , Ooty: A special awareness campaign called ``Namma Uru Superu'' aims to achieve the status of a garbage-free district in the Nilgiris.
× RELATED ரயில் நிலையம் புனரமைப்பு