×

அரக்கோணம் ரயில் நிலையத்தில் போலீஸ் சோதனை ரயிலில் ஆவணங்கள் இன்றி எடுத்து சென்ற 1.3 கிலோ தங்க நகை, ரூ.37 லட்சம் பறிமுதல்: நகைக்கடை ஊழியரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை

அரக்கோணம்: அரக்கோணம் ரயில் நிலையத்தில் நேற்று அதிகாலை நடத்திய சோதனையில், ஆலப்புழா எக்ஸ்பிரசில் ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட 1.357 கிலோ தங்க நகைகள், ரூ.37.43 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர். அரக்கோணம் ரயில் நிலையம் வந்த பல்வேறு ரயில்களில் ரயில்வே போலீசார் நேற்று அதிகாலை அதிரடி சோதனை நடத்தினர். இதேபோல் அதிகாலை 3.30 மணிக்கு ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில்  இருந்து கேரள மாநிலம் ஆலப்புழாவிற்கு செல்லும் தன்பாத்- ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனை நடத்தினர். அப்போது, பொதுப்பயணிகள் பெட்டியில் சந்தேகப்படும்படி இருந்த பைகளை சோதனையிட்டனர்.

அதில், ஒரு பையில் ஏராளமான தங்க நகைகள் மற்றும் கட்டுக்கட்டாக பணம் இருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், அவற்றை கொண்டு வந்தவரிடம் ஆவணங்கள் இல்லாததால் தீவிரமாக விசாரித்தனர். இதில் அவர் கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த நாகராஜ் (37) என்பதும், கோவையில் உள்ள ஒரு நகை கடையில் வேலை செய்வதும் தெரிய வந்தது.

கடையில் இருந்து  நகைகளை ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்து பணத்தை பெற்று வருவாராம். அதன்படி, நகைகளை விற்று விட்டு மீதமுள்ள 1.357 கிலோ நகைகள் மற்றும் நகை விற்ற பணம் ரூ.37.43 லட்சத்தை எடுத்துக்கொண்டு மீண்டும் கோவைக்கு சென்று கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாததால், சென்னை வருமான வரித்துறையினருக்கு போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து சென்னை நுங்கம்பாக்கத்தில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் குழு நேற்று மதியம் அங்கு சென்றனர். அவர்களிடம் நகை, பணம் மற்றும் கோவை நகை கடை ஊழியர் நாகராஜை ஒப்படைத்தனர்.அவரை சென்னை வருமான வரித்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்று அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Tags : Arakkonam railway station , Arakkonam railway station, Police raid, Jeweler shop employee, Income tax officials interrogated
× RELATED அரக்கோணம் ரயில் நிலையத்தில் விரைவு...