தேஜஸ்வி யாதவ் ஆதரவு நிதிஷ் குமார் வலுவான பிரதமர் வேட்பாளர்

புதுடெல்லி: ‘எதிர்க்கட்சிகள் பரிசீலனை செய்யும்பட்சத்தில், பீகார் முதல்வர் நிதிஷ்குமார் வலுவான பிரதமர் வேட்பாளராக இருப்பார்’ என பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆதரவு தெரிவித்துள்ளார். பீகாரில் பாஜ உடனான கூட்டணியை முறித்துக் கொண்ட நிதிஷ் குமார், லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் இணைந்து ஆட்சி அமைத்துள்ளார். முதல்வராக நிதிஷ் குமாரும், துணை முதல்வராக லாலுவின் மகனும் ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான தேஜஸ்வி யாதவும் பதவி ஏற்றுள்ளனர். நிதிஷ்குமார் மீண்டும் எதிர்க்கட்சிகள் பக்கம் வந்துள்ள நிலையில், 2024 மக்களவை தேர்தலில் மோடிக்கு எதிராக எதிர்க்கட்களின் பிரதமர் வேட்பாளராக அவர் நிறுத்தப்படலாம் என்ற பேச்சு எழுத் தொடங்கி உள்ளது.

இந்நிலையில், பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் அளித்துள்ள பேட்டியில், ‘‘பீகாரில் ஐக்கிய ஜனதா தளம், மெகா கூட்டணியுடன் இணைந்து ஆட்சி அமைத்திருப்பது, எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கு நல்லதாகும். தற்போதைய சூழலில் பணம், அதிகாரம், ஆட்சி, ஊடகங்களின் பலத்துடன் ஆதிக்கம் செலுத்தும் பாஜ, நாட்டின் பன்முகத்தன்மையை அகற்றுவதில் உறுதியாக இருப்பதை அனைத்து எதிர்க்கட்சிகளும் ஏற்றுக் கொள்கின்றன.

எனவே, மாநில கட்சிகளும், முற்போக்கு அரசியல் அமைப்புகளும் தங்களின் குறுகிய லாபத்தையும், இழப்புகளையும் தாண்டி நாட்டை காக்க வேண்டும். இப்போது அழிவைத் தடுக்கவில்லை என்றால், மீண்டும் அதை கட்டி எழுப்புவது மிகவும் கடினம். இந்த விஷயத்தில் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகள் சார்பில் என்னால் பேச முடியாது. ஆனால், அனைத்து எதிர்க்கட்சிகளும் பரிசீலிக்கும் பட்சத்தில், நிதிஷ் குமார் வலுவான பிரதமர் வேட்பாளராக இருப்பார்’’ என்றார்.

Related Stories: