×

தூத்துக்குடி துப்பாக்கி சூடு ஆணைய அறிக்கை பேரவையில் வைக்கப்படும்: சட்ட அமைச்சர் ரகுபதி அறிவிப்பு

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான ஓய்வுபெற்ற நீதிபதி அருணா விசாரணை ஆணையத்தின் அறிக்கை மீது சம்பந்தப்பட்ட துறைகள் தகுந்த நடவடிக்கை எடுத்தபின்,  நடவடிக்கை எடுத்ததற்கான அறிக்கையுடன், ஆணையத்தின் இறுதி அறிக்கை சட்டப்பேரவையில் வைக்கப்படும் என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். இதுகுறித்து தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

தூத்துக்குடியில் 22.05.2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி பேரணி நடத்திய உள்ளூர் மக்களின் மீது காவல் துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதற்கான காரணங்கள், சூழ்நிலைகள் குறித்தும், தூத்துக்குடியிலும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் நிகழ்ந்த பிந்தைய நிகழ்வுகள் குறித்தும் விசாரணை செய்வதற்காக நீதியரசர் அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் 23.05.2018 மூலம் தமிழக அரசால் அமைக்கப்பட்டது.

விசாரணை ஆணையம் தன்னுடைய இடைக்கால அறிக்கையை 14.05.2021 அன்று அரசுக்கு அளித்தது. அந்த அறிக்கையின் பரிந்துரையின்படி பொதுமக்கள் மீது பதிவு செய்யப்பட்ட 38 வழக்குகளை திரும்பப்பெறவும், போராட்டத்தின்போது காவல் துறையால் கைது செய்யப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளான 93 பேருக்கு தலா ரூ.1 லட்சம் உதவித்தொகை வழங்கவும், போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் 30.5.2018 அன்று இறந்த, பிணையில் வெளிவந்த ஆயுள் தண்டனை கைதி பரத்ராஜ் தாயாருக்கு ரூ.2 லட்சம் உதவித்தொகையும், திரும்பப்பெற தகுதியுள்ள 38 வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபர்களின் உயர்கல்வியும் வேலைவாய்ப்பும் தொடர தடையில்லா சான்று வழங்கவும் 26.05.2021 அன்று அரசாணை வெளியிடப்பட்டது.

விசாரணை ஆணையத்தின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரைகளின் மீது அரசு அவ்வப்போது நடவடிக்கை எடுத்துள்ளது. மேற்படி விசாரணை ஆணையத்தின் இறுதி அறிக்கை 18.05.2022 அன்று தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த அறிக்கை நான்கு தொகுதிகளாக கொடுக்கப்பட்டுள்ளதால் அதை தீவிரமாக பரிசீலிக்க வேண்டியுள்ளது.

இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள அலுவலர்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பப்பட்டு அவை சட்ட ஆலோசகர்களின் பரிசீலனையில் உள்ளது.  சம்பந்தப்பட்ட துறைகள் தகுந்த நடவடிக்கை எடுத்தபின், நடவடிக்கை எடுத்ததற்கான அறிக்கையுடன், ஆணையத்தின் இறுதி அறிக்கை தமிழ்நாடு சட்டப்பேரவையில் வைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Tuticorin Firing Commission ,Law Minister ,Raghupathi , Tuticorin Firing Commission report to be tabled in Assembly: Law Minister Raghupathi announced
× RELATED காவிரி நீரை களவாடும் அதிமுக மாஜி...