×

திருத்தங்கல் மண்டலத்தில் பூட்டிக்கிடக்கும் சுகாதார வளாகங்கள் பயன்பாட்டிற்கு வருமா?

சிவகாசி: சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் மண்டலத்தில் உள்ள 20 சுகாதார வளாகங்களை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.நாட்டில் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து ஒன்றிய, மாநில அரசுகள் கோடிக்கணக்கான பணம் நிதி ஒதுக்கீடு செய்கின்றன. சுகாதார வளாகங்கள், தனி நபர் கழிப்பிடங்கள் என ஒவ்வொரு திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து சுகாதாரத்தை காக்க அரசு முயற்சி செய்து வருகின்றது. ஆளும் அரசுகள் எத்தனை திட்டங்கள் போட்டாலும் அதனை நடைமுறை படுத்துவது கடைசியில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள்தான். இந்த உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் ஒருசில அதிகாரிகளினால் ஒட்டு மொத்த அரசிற்கும் கெட்ட பெயர் ஏற்படுகின்றது.

 அதிகாரிகள் அலட்சியம் பாதிக்கப்பட்டுள்ள திட்டங்களில் சுகாதார திட்டமும் அடங்கும். சிவகாசி மாநகராட்சியில் திருத்தங்கல் மண்டலத்தில் 24 வார்டுகள் உள்ளன. சுமார் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த மண்டலத்தில் 32 சுகாதார வளாகங்கள் உள்ளன. இதில் 20க்கும் மேற்பட்ட சுகாதார வளாகங்கள் முடங்கிக் கிடக்கின்றன. இது மக்களிடத்தில் அதிருப்தியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. எம்எல்ஏ நிதி, பொது நிதி உட்பட பல்வேறு அரசின் வளர்ச்சி நிதியில் லட்சக்கணக்கான மதிப்பீட்டில் கட்டப்பட்ட சுகாதார வளாகங்கள் பூட்டிக்கிடக்கின்றன.முத்துமாரி நகர், சுக்ரவார்பட்டி ரோடு, பறையர்குளம் பகுதி, திருத்தங்கல் சாலை ஜா போஸ் கல்யாண மண்டபம் எதிர்புறம் மற்றும் செங்குளம் கண்மாய் அருகே உள்ள சுகாதார வளாகம் என திருத்தங்கல் மண்டலத்தில் 20திற்கும் மேற்பட்ட சுகாதார வளாகங்கள் பூட்டியே கிடக்கின்றன. இதில் பெரும்பாலான சுகாதார வளாகங்கள் பயன்படுத்தாமலே சேதமடைந்து காணப்படுகின்றது.

பெரும்பாலான சுகாதார வளாகங்கள் பூட்டிக்கிடப்பதால் செங்குளம் கண்மாய் சாலை, மயானச்சாலை மற்றும் பல பகுதிகளில் உள்ள முட்புதர்களையும் திறந்தவெளிக் கழிப்பிடமாக பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் திருத்தங்கல் மண்டலத்தின் பல பகுதிகளில் துர்நாற்றம் வீசுகின்றது. துர்நாற்றம் காரணமாக சாலை, கண்மாய் வழியாக நடந்து செல்லவே அருவருப்பாக உள்ளது. மேலும் சிலர் வாறுகால் பகுதியை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துவதால் குடியிருப்பு வாசிகள் பெரும் சுகாதார சீர்கேட்டை சந்தித்து வருகின்றனர். திருத்தங்கல் மண்டலத்தில் அதிகாரிகளின் கவனம் அதிகம் தேவை. எனவே பூட்டிக்கிடக்கும் சுகாதார வளாகங்களை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags : Thiruthangal Mandal , Will the stalled health complexes in Thiruthangal Mandal come into use?
× RELATED திருத்தங்கல் மண்டலத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை மேயர் ஆய்வு