திருவள்ளூர் அருகே ரூட்தல பிரச்னையில் கல்லூரி மாணவரை வெட்டிய சகமாணவர்கள் 3 பேர் அதிரடி கைது

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே ரூட்தல பிரச்னையில் கல்லூரி மாணவரை வெட்டிய சக மாணவர்கள் மூவரை போலீசார் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் அடுத்த ஏகாட்டூர் ரயில் நிலையத்தில் கடந்த 16ம் தேதி பச்சையப்பன் கல்லூரி, மாநில கல்லூரி மாணவர்கள் இடையே ‘’ரூட்தல’’ பிரச்னையில் பயங்கர மோதல் ஏற்பட்டது. அப்போது இரண்டு தரப்பினரும் ஜல்லி கற்கள் மற்றும் கத்திகளால் சரமாரியாக தாக்கிக்கொண்டனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் பச்சையப்பன் கல்லூரியில் பிஏ 3ம் ஆண்டு படித்துவரும் திருவள்ளூர் அருகே தக்கோலம் ராஜம்பேட்டை கிராமத்தை சேர்ந்த தினேஷ்குமார் (20) என்பவர்  தலையில் படுகாயம் அடைந்தார். அவர் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதுசம்பந்தமாக திருவள்ளூர் இருப்புப்பாதை காவல் நிலையம் ஆய்வாளர் விஜயலட்சுமி, எஸ்ஐ ராமகிருஷ்ணன் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுவரும் மாணவர் தினேஷ்குமாரிடம் விசாரணை நடத்தினர்.

இதன்படி வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்தநிலையில், சிகிச்சை பெற்றுவரும் மாணவர் கொடுத்த தகவல்படி கடம்பத்தூரை சேர்ந்த மாணவர்கள் ராகுல் (19), ரோகித் (19), திருவாலங்காடு பகுதியை சேர்ந்த ராகுல் (19) ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் மாநில கல்லூரி மாணவர்களுடன் ரயிலில் பயணிக்கும் நண்பர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: