×

கொத்திமங்கலம் கூட்ரோடு பகுதியில் காட்சி பொருளான சிக்னல்கள்: ரவுண்டானா அமைக்க கோரிக்கை

திருக்கழுக்குன்றம்: கொத்திமங்கலம் கூட்ரோடு பகுதியில் இயங்காத நிலையில், காட்சிப் பொருளாக உள்ள சிக்னல்களை இயக்கவும், ரவுண்டானா அமைக்கவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருக்கழுக்குன்றம் அருகே கொத்திமங்கலம் கிராமத்தில் மாமல்லபுரம் - திருக்கழுக்குன்றம் மற்றும்  செங்கல்பட்டு - கல்பாக்கம் இணைக்கும் கூட்டு சாலை உள்ளது. இந்த கூட்டு சாலை வழியாக இரவும், பகலும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.  

இப்பகுதியில் உள்ள சிக்னல் ஒன்று கூட இயங்காததால் இவ்வழியாக வருகின்ற  வாகன ஓட்டிகள் யார் எந்தப் பக்கம் செல்ல வேண்டும் என்று  குழம்பி போகின்றனர். இதனால், இப்பகுதியில் தொடர் விபத்துகள் நடக்கிறது. இது மட்டுமின்றி இங்கு ரவுண்டானா இல்லாததாலும் விபத்துகள் ஏற்படுகிறது. தொடர் விபத்துக்களை தவிர்க்கவும், தடுக்கவும் இப்பகுதியில் ரவுண்டானா அமைக்கவும், அமைக்கப்பட்ட  ஆரம்ப காலத்திலிருந்தே இயங்காத சிக்னல்களை இயங்க செய்ய வேண்டுமென்றும் பொதுமக்கள்,  வாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘கடந்த அதிமுக ஆட்சியின்போது, 3 ஆண்டுகளுக்கு முன்பு சாலை விரிவாக்கம் மற்றும் புதிய சாலை அமைக்கப்பட்டது. சாலை அமைக்கும் பணியின் திட்ட மதிப்பீட்டில் கூட்டு சாலை பகுதிகளில் ரவுண்டானா மற்றும் சிக்னல்கள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். அதன்பிறகு சிக்னல்கள் அமைக்கப்பட்டன. ஆனால், ரவுண்டானா அமைக்கப்படவில்லை.

மேலும் கூட்ரோடு பகுதியில் அமைக்கப்பட்ட சிக்னல்கள் அப்போது மட்டும் சில தினங்கள் இயங்கி அதன் பிறகு இயங்காமல் பல ஆண்டுகளாக கிடக்கிறது. இதையெல்லாம் பார்த்து கண்காணித்து சரி செய்ய வேண்டிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு பலமுறை தெரிவித்தும் மௌனம் காப்பதால் இப்பகுதியில் தொடர் விபத்துக்கள் அரங்கேறி வருகிறது. இந்த விபத்துக்களை தடுக்கும் விதமாக துரிதகதியில் இங்கு ரவுண்டானா அமைக்க வேண்டும். மேலும், இயங்காமல் காட்சி பொருளாக உள்ள சிக்னல்களை இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Tags : Kothimangalam Kootrodu , Request for construction of Kothimangalam shelter area, signals, roundabout
× RELATED கொத்திமங்கலம் கூட்ரோடு பகுதியில்...