×

2017 முதல் 2020 வரை அதிமுக ஆட்சியில் நடந்த சாலை விபத்துகளில் 22 ஆயிரம் மரணங்கள் மறைப்பு: விருது பெற மறைக்கப்பட்டதா என விசாரணை

சென்னை: அதிமுக ஆட்சியின் போது 2017 முதல் 2020 வரை நடந்த சாலை விபத்துகளில் 22,018 மரணங்கள் மறைக்கப்பட்டுள்ளன. இவை விருது பெற மறைக்கப்பட்டதா என விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 2017 முதல் 2020 வரை சாலை விபத்தில் குறைவான உயிரிழப்பு ஏற்பட்டதாக கூறி உலக வங்கி பாராட்டியது. இதையடுத்து ஒன்றிய அரசு சார்பில் கடந்த 2018 மற்றும் 2019 ஆகிய இரண்டு ஆண்டுகளில் சாலை பாதுகாப்பில் சிறப்பாக செயல்பட்டதாக கூறி இரண்டு தேசிய விருதுகள் வழங்கப்பட்டன. இந்நிலையில், 2017 முதல் 2020ம் ஆண்டு வரை தமிழகத்தில் நடந்த சாலை விபத்துகளில் இறந்தவர்கள் தொடர்பான தரவுகள் மீண்டும் ஆய்வு செய்யப்பட்டது.

அப்போது, பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைவாக காட்டப்பட்டுள்ளது. அதன்படி நான்கு ஆண்டுகளில் 22,018 உயிரிழப்புகள் குறைவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக, சாலை விபத்துகள் மட்டும் 2017 முதல் 2020ம் ஆண்டு வரையிலான 4 ஆண்டுகளில் 12 சதவீதத்தில் இருந்து   83 சதவீதமாக உயர்ந்துள்ளது. மேலும், கொரோனா பாதிப்பு வேகமாக பரவிய நேரங்களில் சாலை விபத்தின் போது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தவர்கள் மட்டுமே கண்கெடுக்கப்பட்டதாகவும், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களை விபத்தில் உயிரிழந்ததாக கணக்கு காட்டாமல் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் இறந்துள்ளதாக கணக்கு காட்டியுள்ளனர்.

அதன்படி, கடந்த 2017ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரையிலான 4 ஆண்டுகளில் சாலை விபத்துகள் மற்றும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள புள்ளிவிவரங்களில் பல்வேறு குளறுபடிகள் இருப்பது தெரியவந்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் விபத்து மற்றும் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விருது பெறுவதற்காக இறப்புகளை குறைத்து காட்டியுள்ளதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளதையடுத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். சாலை விபத்துகள் மற்றும் அதனால் நிகழ்ந்த மரணம் தொடர்பான புதிய தரவுகள் மாநில அரசுக்கும், தேசிய குற்ற ஆவண காப்பகத்துக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

* ஒவ்வொரு ஆண்டும் எத்தனை பேர்?
கடந்த  2017ம் ஆண்டு 17,926 பேர் உயிரிழந்த நிலையில் 16,157 பேரும், 2018ம் ஆண்டு 18,394 பேர் உயிரிழந்த நிலையில் 12,216 பேரும், 2019ம் ஆண்டு 18,129 பேர் உயிரிழந்த நிலையில் 10,525 பேரும், 2020ம் ஆண்டு 14,527 பேர் உயிரிழந்த நிலையில் 8,060 பேரும் உயிரிழந்ததாக குறைந்து கணக்கு காட்டியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

Tags : AIADMK , 22,000 deaths in road accidents during AIADMK rule from 2017 to 2020 covered up: Investigation whether hidden to get award
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...