மாதவரத்தில் ரூ.8 கோடியில் ஆவின் மாநில மைய ஆய்வகக் கட்டிடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: மாதவரத்தில் ரூ.8 கோடியில் ஆவின் மாநில மைய ஆய்வக கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் கட்டுபாட்டில் தினந்தோறும் சுமார் 43 லட்சம் லிட்டர் பால், கிராமப்புற விவசாயிகளிடமிருந்து 10,540 பால் உற்பத்தியாளர் சங்கங்கள் மூலமாக அனைத்து மாவட்ட ஒன்றியங்களால் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆவின் நிறுவனம், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக பால் விற்பனையில் தமிழகத்தில் முன்னோடியாக திகழ்ந்து வருகிறது.

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையில், பால் மற்றும் பால் பொருட்களின் தரத்தினை உறுதி செய்யும் விதமாக தேசிய பால் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், சென்னை, மாதவரம் பால் பண்ணை வளாகத்தில் 17,422 சதுர அடி பரப்பளவில் அதிநவீன பகுப்பாய்வு கருவிகளுடன் ரூ.8 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ஆவின் மாநில மைய ஆய்வகக் கட்டிடம் கட்டப்பட்டது.

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை  செயலகத்தில், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின்  (ஆவின்) சார்பில் சென்னை, மாதவரம் பால் பண்ணை வளாகத்தில் ரூ.8 கோடி செலவில்  கட்டப்பட்டுள்ள ஆவின் மாநில மைய ஆய்வகக் கட்டிடத்தை திறந்து வைத்தார்.  இந்நிகழ்ச்சியில், பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், தலைமைச் செயலாளர்  இறையன்பு, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை  முதன்மைச் செயலாளர் கார்த்திக், ஆவின் மேலாண்மை இயக்குநர் சுப்பையன்  மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், சேலம், கோயம்புத்தூர், கன்னியாகுமரி, தேனி, ஈரோடு, திருவண்ணாமலை, மதுரை, விழுப்புரம், திருச்சி ஆகிய மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்கள் மற்றும் சென்னையில் உள்ள தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான 50 பணியாளர்களின் வாரிசுதார்களுக்கு, கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, 10 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

Related Stories: