ஃபிபா அதிரடி நடவடிக்கை இந்திய கால்பந்து கூட்டமைப்பு சஸ்பெண்ட்

புதுடெல்லி: இந்திய கால்பந்து கூட்டமைப்பை (ஏஐஎப்எப்), சர்வதேச கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பான ஃபிபா அதிரடியாக சஸ்பெண்ட் செய்துள்ளது. ஏஐஎப்எப் நிர்வாகத்துக்கு அமைப்பு விதிகளின் படி குறிப்பிட்ட கால இடைவெளியில் தேர்தல் நடத்தாததால் பழைய நிர்வாகிகளே பொறுப்பில் நீண்ட நாட்களாக நீடித்தனர். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஏஐஎப்எப் நிர்வாகக் குழுவை கலைத்ததுடன் முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.தவே தலைமையில் புதிய  நிர்வாகிகள் குழுவை அமைத்தது. அதில் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி, இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் பாஸ்கர் கங்குலி ஆகியோர் இடம் பெற்றனர். இந்த நடவடிக்கையை ஃபிபா ஏற்கவில்லை. நீதிமன்ற தலையீடு விலக்கிக்கொள்ளப்படாததால், ஏஐஎப்எப் அமைப்பை இடைநீக்கம் செய்வதாக ஃபிபா நேற்று அறிவித்தது. இதனால் யு-17 மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டி (அக்.11 - அக்.30), திட்டமிட்டபடி இந்தியாவில் நடப்பது கேள்விக்குறியாகி உள்ளது. 2023 ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியா விளையாடுவதிலும் சிக்கல் ஏற்படும் வாய்ப்பு உருவாகி உள்ளது.

* அவசர வழக்காக இன்று விசாரணை

ஏஐஎப்எப் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் நேற்று ஆஜரான ஒன்றிய அரசின் சொலிசிட்டர் துஷார் மேத்தா ‘பிரச்னையின் தீவிரம் கருதி, அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு தொடர்பான வழக்கை அவசரமாகப் பட்டியலிட்டு விசாரிக்க வேண்டும்’ என கோரிக்கை வைத்தார். கோரிக்கையை ஏற்பதாக நீதிபதி தெரிவித்ததை அடுத்து, ஏஐஎப்எப் வழக்கு இன்று விசாரிக்கப்படுகிறது.

Related Stories: