ட்வீட் கார்னர்... விடைபெறும் செரீனா!

அமெரிக்க டென்னிஸ் நட்சத்திரம் செரீனா வில்லியம்ஸ் (40 வயது), ஆகஸ்ட் 29ம் தேதி தொடங்க உள்ள யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் தொடருடன் ஓய்வு பெறபோவதாக அறிவித்துள்ளார். மகளிர் ஒற்றையர் பிரிவில்... ஆஸ்திரேலிய ஓபனில் 7, பிரெஞ்ச் ஓபனில் 3, விம்பிள்டனில் 7, யுஎஸ் ஓபனில் 6 என மொத்தம் 23 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற சாதனையாளர். கடைசியாக 2017ல் ஆஸி. ஓபனில் பட்டம் வென்றார். திருமணம், குழந்தை என்று குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தியதால் ஓராண்டு இடைவெளிக்குப் பிறகு டென்னிஸ் களத்துக்கு திரும்பினாலும், பெரிதாக சாதிக்க முடியவில்லை. 2019ல் மீண்டும் டாப் 10ல் இடம், விம்பிள்டன் மற்றும் யுஎஸ் ஒபனில் 2வது இடம் என்று அசத்தினாலும், கிராண்ட் ஸ்லாம் பட்டம் வெல்லும் ஆசை கைகூடவில்லை. காயங்கள் காரணமாக உடல்தகுதியிலும் பிரச்னை ஏற்பட்ட நிலையில், எதிர்வரும் யுஎஸ் ஓபன் தொடருடன்ஓய்வு பெறப்போகிறார் செரீனா. இந்த நிலையில், கனடாவின் டொரான்டோ நகரில் நடக்கும் நேஷனல் பேங்க் ஓபன் தொடரில் சுவிஸ் வீராங்கனை பெலிண்டா பென்சிக்குடன் நேற்று மோதிய செரீனா 2-6, 4-6 என்ற நேர் செட்களில் போராடி தோற்றார். டொரான்டோ ரசிகர்களிடம் இருந்து அவர் கண்ணீர்மல்க விடைபெற்றார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளடு. அடுத்த மாதம் வெளியாகும் ‘வோக்’ இதழ், செரீனாவின் அட்டைப்படத்துடன் பிரத்யேக பேட்டியையும் வெளியிட்டு கவுரவிக்கிறது.

Related Stories: