கொழும்பு காலி முகத்திடலில் இருந்து வெளியேறப்போவதாக போராட்டக்காரர்கள் அறிவிப்பு

கொழும்பு: இலங்கை காலி முகத்திடல் போராட்ட களத்தில் இருந்து வெளியேறுவதாக போராட்டக்காரர்கள் அறிவித்தனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, கடந்த ஏப்ரல் 9ம் தேதி இலங்கை அரசுக்கு எதிராக, ஆர்ப்பாட்டக்காரர்கள் கொழும்பு காலிமுகத்திடலில் போராட்டம் நடத்தினர். போராட்டம் தீவிரமடைந்த நிலையில், கோத்தபய ராஜபக்சே இலங்கையில் இருந்து தப்பி சிங்கப்பூா் சென்றார். பின்பு அங்கிருந்தவாறே அவர் தனது அதிபா் பதவியை ராஜினாமா செய்தாா். இதையடுத்து, இலங்கையில் நடைபெற்ற நாடாளுமன்ற வாக்கெடுப்பு மூலம் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வு செய்யப்பட்டாா். இந்நிலையில், சுமார் 4 மாதங்களுக்கு பின்னர் போராட்டக்காரர்கள் அங்கிருந்து வெளியேறுவதாக அரசிடம் அறிவித்துள்ளனர்.

ஏற்கனவே காவல்துறையினர் கடந்த 5ம் தேதிக்கு முன்பாக, இந்த காலிமுகத் திடலில் இருந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் வெளியேற வேண்டும் என்று அறிவித்திருந்த போதிலும் நீதிமன்றம் இம்மாதம் 10ம் தேதி வரைக்கும் அவர்கள் அங்கு தங்கி இருக்கலாம் என்று அறிவித்திருந்தது. கடந்த 5ம் தேதிக்கு முன்னதாக அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பல்வேறு அமைப்பினர் அங்கிருந்து வெளியேறினர். அதன் பிறகு ஒரு சில அமைப்புகள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில், இன்று போராட்டக்காரர்கள் காலி முகத்திடலை விட்டு வெளியேறுவதாகவும், போராட்டம் புதிய வடிவில் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளனர். அங்குள்ள கூடாரங்கள் மற்றும் முகாம்கள் விரைவில் அகற்றப்படும் என்றும் அவர்கள் உறுதியளித்துள்ளனர்.

Related Stories: