×

வெள்ள நீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து உரிய இழப்பீடுகளை வழங்க வேண்டும்: ஜி.கே வாசன் கோரிக்கை

சென்னை: வெள்ள நீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடுகளை, அரசு காலதாமதம் இல்லாமல் வழங்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் தெரிவித்துள்ளார். இது குறித்து ஜி.கே வாசன் வெளியிட்ட அறிக்கை: கர்நாடகா மாநிலத்தில் பெய்துவரும் கடும் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதனால் மேட்டூர் அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் வெளியேற்றுப்பட்டு வருகிறது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடத்தில் அதிகமான நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் வெள்ளநீர் புகுந்து பலநூறு ஏக்கர்  நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள பருத்தி, காய்கறிகள்  மிகுந்த பாதிப்படைந்துள்ளது. கொள்ளிடம் அருகேயும், ஆற்றுப்படுகை அருகில் உள்ள மேலவாடி கிராமத்திலும் 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்து மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி இருக்கிறார்கள்.

அதிகமான பாதிப்பிற்குள்ளான பகுதிகள் நாதல்படுகை, பில்படுகை மற்றும் முதலைமேடு திட்டு, வெள்ளை மணல், கிராமங்கள் ஆகும். இப்பகுதியில்  தோட்ட பயிர்களான, மரவள்ளிகிழங்கு, முல்லை, மல்லி, சாமந்திபூ சாகுபடி செய்யப்படுகிறது, அவை தண்ணீரில் மூழ்கி முற்றிலும் அழுகிவிட்டது. மேலும் மாதர வேலூர் பகுதிகளில் செங்கல் காலவாய் தொழில் செய்து வருகின்றனர் இங்கு 50 க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகளை தண்ணீர்சூழ்ந்து, சுடப்படாத செங்கல்கள் எல்லாம் நனைத்து கரைந்துபோய் அவர்களின் உழைப்பெல்லாம் வீணாகிவிட்டது.

ஆகவே தமிழக அரசு உடனடியாக வெள்ளநீர் வடிந்தவுடன் அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து, விவசாயிகளுக்கும், செங்கல் உற்பத்தியாளர்களுக்கும், பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கும் உரிய இழப்பீடுகளை காலதாமதம் இல்லாமல் வழங்கவேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

Tags : GK Vasan , Flood-affected areas should be inspected and compensation should be provided: GK Vasan demands
× RELATED ஒன்றிய அரசு சட்டத்தை வழிபாடாக...