×

ஊரப்பாக்கத்தில் ரூ.45 கோடி அரசு நிலம் மீட்பு; அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

கூடுவாஞ்சேரி: ஊரப்பாக்கத்தில் நீர் வரத்து கால்வாயில் தளம் போட்ட 13 வீடுகள் உயர்நீதி மன்ற உத்தரவால் இடித்து தரைமட்டம் செய்து அகற்றப்பட்டது. இதனால், ரூ. 45 கோடி அரசு நிலம்  அதிரடியாக மீட்கப்பட்டது. காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் ஊரப்பாக்கம் ஊராட்சி உள்ளது. இங்கு ஊரப்பாக்கம், கிளாம்பாக்கம், ஐயஞ்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நந்திவரம் பெரிய ஏரிக்கும், ஊரப்பாக்கம் ஏரிக்கும் இடையில் நீர்வரத்து கால்வாய் உள்ளது. இதனை ஆக்கிரமித்து பலர் தளம் போட்ட வீடுகளை கட்டி உள்ளனர். இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலை புறம்போக்கில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி உயர் நீதிமன்றம், உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து, வருவாய்த் துறை மற்றும் பொதுப்பணித் துறை இணைந்து, ஆக்கிரமிப்பு பிடியில் உள்ள வீடுகளை காலி செய்யும்படி முறைப்படி  கடந்த 3 மாதத்திற்கு முன்பு  மூன்று முறை சம்பந்தப்பட்ட வீடுகளுக்கு நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது. ஆனால், யாரும் வீடுகளை காலி செய்யவில்லை.

இதனை அடுத்து வண்டலூர் தாசில்தார் பாலாஜி, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் குஜராஜ் ஆகியோர் தலைமையில் ஜெயலட்சுமி நகரிலுள்ள நீர்வரத்து கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகளை அகற்றுவதற்காக ஐந்துக்கும் மேற்பட்ட  பொக்லைன் இயந்திரகள் நேற்று எடுத்து வந்தனர். இதனை கண்டதும், அப்பகுதியை சேர்ந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு வந்து  வீடுகளை இடிக்க கூடாது என கூறி அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதம் செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் கீத்தா தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.  அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அப்பகுதியை சேர்ந்த மக்கள் கூறுகையில், நீர்நிலை வகைபாடு என்று தெரியாமல் மேற்படி இடத்தை பணம் கொடுத்து வாங்கி தளம் வீடு கட்டி பல ஆண்டுகளாக குடியிருந்து வருகிறோம்.

அப்போது, வீடு கட்டும்போதே அதிகாரிகள் எங்களை எச்சரித்து வீடுகளை கட்ட கூடாது என்று தடுத்து இருந்தால், பரவாயில்லை. ஆனால், அப்போது கண்டுகொள்ளாத அதிகாரிகள் தற்போது நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து வீடுகளை அகற்றுகின்றனர். இதனால், நாங்கள் குடும்பத்துடன் நடு தெருவில் நிற்கிறோம். எனவே, எங்களுக்கு மாற்று இடம் அல்லது மாற்று வீடு ஒதுக்கி தர மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி பெண்கள் கதறி அழுதனர். இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகளும், போலீசாரும் வாக்குறுதி கொடுத்ததால், அனைவரும் கலைந்து சென்றனர். இதனைத்தொடர்ந்து தளம் போட்ட 13 வீடுகளை அதிகாரிகள் இடித்து தரைமட்டமாக்கினர். மேலும், மீட்கப்பட்ட 3 ஏக்கர் கொண்ட அரசு நிலத்தின் மதிப்பு ரூ.45 கோடி, என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Urpakkam , Recovery of Rs. 45 crore government land in Urpakkam; Officials take action
× RELATED ஊரப்பாக்கம் ஜிஎஸ்டி சாலை ஓரத்தில்...