×

ஈரோடு, அந்தியூரில் போதை மாத்திரை விற்பனை 7 பேர் கும்பல் கைது-2 பேருக்கு வலை

ஈரோடு :  ஈரோடு, அந்தியூரில் போதை மாத்திரை விற்ற 7 பேரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். இதில், 4 பேர் பட்டதாரி வாலிபர்கள் என்னும் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. ஈரோடு அருகே சித்தோடு போலீசார், அப்பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆர்என் புதூர் பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலின் பேரில் சோதனை நடத்தினர். அங்கு பேக்கரி ஒன்றின் முன்பு நின்றிருந்த இருவரிடம் விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் இருவரும் தலா 2 அட்டை போதை மாத்திரைகளை வைத்திருந்தது தெரியவந்தது.

போலீசார் நடத்திய விசாரணையில், கனிராவுத்தர் குளம் பகுதியை சேர்ந்த சஞ்சய் என்பவர் மூலமாக சேலத்தில் இருந்து போதை மாத்திரைகள் வாங்கி அவர்கள் விற்பது தெரியவந்தது. இதையடுத்து, போதை மாத்திரை விற்றதாக ஆர்என் புதூர் பகுதியை சேர்ந்த டையிங் தொழிலாளி திலீப்குமார் (23) மற்றும் கட்டிட தொழிலாளி வினித்குமார் (22) ஆகிய இருவர் மீதும் சித்தோடு போலீசார் வழக்குபதிந்து கைது செய்தனர். மேலும், 14 சிறிய அட்டை பெட்டிகளில் விற்பனைக்கு வைத்திருந்த போதை மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனர்.

இதேபோல், அந்தியூர் அருகே உள்ள மலைக்கருப்புச்சாமி கோவிலுக்கு செல்லும் ரோட்டில் உள்ள மானுவ பூமியில் ஒரு கும்பல் போதை மாத்திரைகளை பயன்படுத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் தலைமையில் போலீசார் அங்கு சென்று, அங்கிருந்த 5 பேரை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அந்தியூர் தவிட்டுப்பாளையத்தை சேர்ந்த சேகர் மகன் சந்தோஷ்குமார் (23), மீனவர் மாரியம்மன் கோயில் வீதியை சேர்ந்த அய்யாச்சாமி மகன் சசிகுமார் (28), தவிட்டுப்பாளையம் நஞ்சப்பா வீதியைச் சேர்ந்த தவசியப்பன் மகன் யுவராஜ் (30), வெங்கையன் வீதியைச் சேர்ந்த  வெங்கடேஷ் மகன் விக்னேஷ் (21), காந்திஜி ரோட்டை சேர்ந்த நித்தியானந்தன் மகன் யுவராஜ் (27) என்பதும், இவர்கள் டாக்டர் பரிந்துரையின்றி, தலா ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.14 ஆயிரத்துக்கு புதுடெல்லியில் இருந்து வாட்ஸ் அப்பில் ஏஜென்சி நிறுவனம் மூலம் பணம் அனுப்பி டெபன்டா டோஸ் 100 மாத்திரைகளை வாங்கியதும் தெரியவந்தது.

மேலும், இந்த மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து சிரிஞ்ச் மற்றும் சிகரெட் பஞ்ச் மூலம் உறிஞ்சி போதைக்காக பயன்படுத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து, 5 பேரையும் கைது செய்து 100 மாத்திரைகளையும் சிரஞ்ச்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.இவர்களில் யுவராஜ் தவிர மற்ற 4 பேரும் இளங்கலை பட்டம் முடித்தவர்கள் என போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. மேலும், இவர்களுக்கு போதை மாத்திரைகளை வாங்கி கொடுத்ததாக ஆப்பக்கூடல் சிந்தகவுண்டன்பாளையத்தை சேர்ந்த அண்ணாதுரை என்பவர் மகன் பாலாஜி, தவிட்டுப்பாளையத்தை சேர்ந்த உத்தரமூர்த்தி என்பவர் மகன் கண்ணன் ஆகிய 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags : Erode, Andhiur , Erode: The police arrested and interrogated 7 people who sold drug pills in Erode and Anthiur. Out of this, 4 people are graduate youths
× RELATED சென்னையில் அடகுக் கடையில் ஓட்டை போட்டு நகை கொள்ளை..!!