×

காட்பாடியில் நள்ளிரவு சோதனை ரயிலில் 20 கிலோ கஞ்சா கடத்திய கேரளாவை சேர்ந்த 3 பேர் கைது

வேலூர் : ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு கஞ்சா உட்பட போதை பொருட்கள் கடத்தலை தடுக்கும் வகையில் மாநில எல்லைகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வேலூர் மாவட்ட எல்லையான காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை சோதனைச்சாவடியில் மதுவிலக்கு போலீசார் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ரயில்களிலும் ரயில்வே போலீசார் சோதனை நடத்தி கஞ்சாவை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில் வடமாநிலங்களில் இருந்து வரும் ரயில்களில் கஞ்சா கடத்துவதாக மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் காட்பாடி ரயில் நிலையத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் வரை செல்லும் டாடா எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் நள்ளிரவு வந்தது. அப்போது பொதுப்பெட்டியில் வேலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் முரளிதரன் தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

மேலும் இருக்கைக்கு அடியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த 3 பைகளை பிரித்து பார்த்தபோது கஞ்சா இருப்பது தெரிந்தது. இதுதொடர்பாக 3 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் கேரளாவை சேர்ந்த ஆகாஷ்(22), மனோஜ்(22), பிரிதீஷ்(23) என்பதும் ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு கஞ்சா கடத்த முயன்றதும் தெரிந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்த சுமார் 20 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து 3 பேரையும் கைது செய்தனர்.

The post காட்பாடியில் நள்ளிரவு சோதனை ரயிலில் 20 கிலோ கஞ்சா கடத்திய கேரளாவை சேர்ந்த 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Kerala ,Gadpadi ,Vellore ,Andhra ,Tamil Nadu ,Katpadi ,Christianpet ,Vellore district ,
× RELATED ஆட்டோ டிரைவரிடம் கத்தியை காட்டி...