×

திட்டங்கள் அறிவிக்கப்பட்டதே தவிர அதிமுக ஆட்சியில் ஒரு திட்டமும் முழுமையாக முடிக்கவில்லை; எடப்பாடி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் துரைமுருகன் பதில்

சென்னை: நீங்கள் ஆட்சியில் இருக்கும் போது ஒரு திட்டத்தையும் முழுமையாக   நிறைவேற்றவே  இல்லை என்று எடப்பாடி குற்றச்சாட்டிற்கு  அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு காவிரி-குண்டாறு இணைப்பு, நடந்தாய் வாழி காவிரி, சரபங்கா திட்டம், அத்திக்கடவு-அவினாசி ஆகிய திட்டங்கள் எல்லாம் ஞாபகம் இருக்கிறதே என்பதில் எனக்கு ஆச்சரியம். நீங்கள் ஆட்சியில் இருக்கும் போது திட்டங்களின் பெயர்களை உச்சரித்து விட்டு சில திட்டங்களை தொட்டு விட்டுத் தான் சென்றீர்களே தவிர எதையும் முழுமையாக  நிறைவேற்றவே  இல்லை.

நடந்தாய் வாழி காவிரி திட்டத்திற்கு 11,400 கோடி வேண்டும் என்று பிரதமரிடம் கோரிக்கை வைத்தீர்கள். கோரிக்கை வைத்ததோடு சரி. ஒரு ரூபாயும் நீங்கள் அந்த 11,400 கோடியில் வாங்கவில்லை. சரபங்கா திட்டத்திற்கு 565 கோடி செலவு செய்தீர்களே தவிர, 10 ஏரிகளுக்காவது தண்ணீர் கொடுத்தது உண்டா. அதுமட்டுமல்ல நில எடுப்பு பணிகளை மறந்து போனீர்கள். இப்போது நாங்கள் வந்து தான் நீங்கள் மறந்து விட்டுப் போன பணிகளை செய்து கொண்டிருக்கிறோம். ஓடையில் தண்ணீர் எடுத்து விடுவது போல எம்.காளிப்பட்டி ஏரிக்கு மட்டும் தண்ணீரை காட்டினீர்களே தவிர அந்த தொகுப்பில் உள்ள மற்ற ஏரிகளுக்கு தண்ணீர் வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நாங்கள் வந்து அந்த தொகுப்பில் அடங்கியுள்ள 6 ஏரிகளையும் சேர்த்து கூடுதலாக 7 ஏரிகளுக்கு தண்ணீர் வழங்கி இருக்கிறோம். ஆனால், இவ்வளவு வேலை பாக்கி இருந்த போதும் ஒப்பந்ததாரருக்கு மட்டும் கச்சிதமாக செட்டில் ஆனது எப்படி? அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை பொறுத்த வரையில்,  95 சதவீதபணிகள் முடிக்கப் பட்டுள்ளது. வரும்டிசம்பர் 2022 க்குள்அனைத்து பணிகளும் முடிக்கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Tags : AIADMK ,Minister ,Duraimurugan ,Edappadi , Not a single project has been fully completed in the AIADMK regime despite the projects being announced; Minister Duraimurugan's response to Edappadi's allegation
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...