×

கர்நாடகாவில் செல்பி எடுக்கும் போது ஏரியில் அடித்துச் செல்லப்பட்ட தந்தை, மகன்: உடனடியாக மீட்கப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்ப்பு

பெங்களூரு: கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தில் கெரக்குடி கிராமத்தில் ஏரியில் செல்பி எடுத்த தந்தையும், மகனும் நீரில் அடித்து செல்லப்பட்ட காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட மகனும், தந்தையும் அதிர்ஷ்டவசமாக பொதுமக்களால் மீட்கப்பட்டனர். கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம்  அருகே உள்ள கிராமத்தில் கொல்லூர் ஏரி கனமழை காரணமாக முழு கொள்ளளவை எட்டியது. அதனால் இந்த ஏரியிலிருந்து அதிகப்படியான நீர் வெளியேற்றப்படுகிறது. வெளியேற்றப்படும் நீரில் அங்குள்ள பொதுமக்கள் மற்றும் வெளியூர் வாசிகள் குளித்து, செல்பி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், வழக்கம்போல் இன்று காலை ஏரியிலிருந்து நீர் வெளியேற்றப்படும் பகுதியில் பெங்களூருவை சேர்ந்த தந்தை, மகன் 2 பேரும், நீரில் குளித்து கொண்டிருந்தனர். அப்பொழுது செல்பி எடுக்க முயற்சித்தபோது தந்தை, மகனை தள்ளி நிற்க கூறியபோது எதிர்பாராவிதமாக சிறுவன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டான். மகனை காப்பாற்ற தந்தையும் முயற்சித்தபோது, அவரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். சுமார் 250 மீட்டர் தூரம் இருவரும் அடித்துச் செல்லப்பட்ட போது, அங்கிருந்த பொதுமக்களும், கிராம வாசிகளும் உடனடியாக செயல்பட்டு அவர்கள் இருவரையும் மீட்டனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.  


Tags : Karnataka , Karnataka, Selfie, Lake, Accident, Avoidance
× RELATED கர்நாடகாவில் ஸ்மோக்கிங் பிஸ்கட்...