×

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 32 செ.மீ. மழை பதிவு.. கரையோரம் யாரும் செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை!!

நீலகிரி: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 32 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் அதிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து எச்சரிக்கை விடுத்துவந்தது. அதன்படி, கடந்த 3 நாட்களாகவே நீலகிரி மாவட்டத்தில் மழையின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக, உதகை மற்றும் குந்தா பகுதியில் மழைப்பதிவு அதிகம் காணப்பட்ட நிலையில், நீர்ப்பிடிப்பு பகுதிகளான கீழ்பவானி, அவலாஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இப்பகுதிகளில் கடந்த 2 நாட்களாகவே மலையின் தாக்கம் அதிகம் காணப்பட்ட நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் மட்டும் 32 செ.மீ. மழையானது பதிவாகியுள்ளது.

அதனைத்தொடர்ந்து மேல்பவானியில் 20 செ.மீ., பந்தலூர் 14 செ.மீ., சின்னக்கல்லாறு பகுதியில் 7 செ.மீ., சோலையாறு, சின்கோனா, வால்பாறை, தேவாலாவில் தலா 5 செ.மீ., கூடலூர் பஜார், நடுவட்டத்தில் தலா 3 செ.மீ., குந்தா பாலம், பள்ளிப்பட்டு, கிளென்மோர்கனில் தலா 2 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. தொடர்ந்து சூறைக்காற்றுடன் மழையானது பெய்து வருவதால், நீர்நிலைகளுக்கு நீர்வரத்தானது 500 கனஅடி முதல் 1000 கனஅடியாக உயர்ந்துள்ளது. இதனால் மேல்பவானி, அவலாஞ்சி, எமரால்டு உள்ளிட்ட முக்கிய அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. மேலும் இம்மாவட்டத்தில் உள்ள 13 அணைகளில் 90% நீரானது நிரம்பியுள்ளது. அதேபோல் 30க்கும் மேற்பட்ட தடுப்பணைகளும் முழுகொள்ளளவை எட்டியுள்ளதால், ஓரிரு நாட்களில் அணைகள் திறக்கப்பட உள்ளது.

இதனிடையே, மாவட்ட நிர்வாகம் அணைகளுக்கு வரும் நீர்வரத்தை தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து வருகிறது. இதனால், அணையின் கரையோரத்திற்கு மக்கள் யாரும் செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மழையின் அளவு நேற்றைய தினத்தை விட இன்று குறைவாக இருந்தாலும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது.  


Tags : Tamil Nadu ,Awalanchi , Tamil Nadu, Avalanche, Heavy Rain, Coastal, District Administration, Warning
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...