×

காவிரியில் வெள்ளப்பெருக்கு: டெல்டாவில் 5,500 பேர் முகாம்களில் தஞ்சம்

சென்னை: காவிரி, கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் டெல்டா மாவட்டங்களில் 5,500 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து நேற்று காலை 1.80 லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் முக்கொம்புக்கு நேற்று காலை 6 மணி நிலவரப்படி 2,55,588 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. இங்கிருந்து காவிரியில் 66,396 கன அடியும், கொள்ளிடத்தில் 1,38,712 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதேபோல் கல்லணைக்கு 70ஆயிரம் கன அடி வருகிறது. இங்கிருந்து காவிரியில் 7,003 கன அடி, வெண்ணாற்றில 7,005 கன அடி, கல்லணை கால்வாயில் 2,019 கன அடி, கொள்ளிடத்தில் 53,620 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

திருச்சி, தஞ்சாவூர் உள்பட டெல்டா மாவட்டங்களில் காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால்  கரையோரங்களில் உள்ள பொதுமக்கள் ஏற்கனவே பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் ஓடுவதால் கரையோர பகுதியில் உள்ள குடியிருப்புகளை நீர் சூழ்ந்தது. கொள்ளிடக்கரையில் உள்ள கிராமங்களில் 5ஆயிரத்துக்கு மேற்பட்டோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இங்குள்ள 200 ஏக்கர் பயிர்கள் வெள்ளத்தில் சேதமடைந்தது. கொள்ளிடம் ஆற்றுக்குள் அமைக்கப்பட்டிருந்த கதவணையில் நேற்று உடைப்பு ஏற்பட்டு கிராமத்துக்குள் தண்ணீர் புகுந்தது. அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வந்து அதை சரிசெய்தனர். கரூர் மாவட்டத்தில் நஞ்சை புகழூர், தவிட்டுப்பாளையம் பகுதிகளில் காவிரி கரையோரம் உள்ள 150 குடும்பங்களை சேர்ந்த 500 பேர் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Tags : Cauvery floods, 5,500 shelter ,camps in delta
× RELATED அபார வளர்ச்சியால் விரிவடையும்...