×

பொள்ளாச்சியில் வாகன போக்குவரத்து அதிகமுள்ள சீனிவாசபுரம் ரயில்வே தரைமட்ட பாலம் சீரமைப்பு பணியால் மக்கள் மகிழ்ச்சி-பாதுகாப்பு நடவடிக்கையில் அதிகாரிகள் தீவிரம்

பொள்ளாச்சி : சீனிவாசபுரம் ரயில்வே தரைமட்ட பாலம் பழுதான சீரமைப்பு பணியால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பொள்ளாச்சி நகரிலிருந்து பிரிந்து செல்லும் முக்கிய நெடுஞ்சாலையில் ஒன்றான மீன்கரைரோட்டில் பகல் மற்றும் இரவு என தொடர்ந்து போக்குவரத்து உள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு செல்லும் முக்கிய சாலையில் ஒன்றாக கருதப்படுவதால், சுமார் 10ஆண்டுகளுக்கு முன்பு, ரோட்டை அகலப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதில், மீன்கரைரோடு சீனிவாசபுரம் வழியாக, ரயில் இயக்கப்படும்போது அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் வெகுநேரம் நின்று செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்பதால், புதிய பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் கோரிக்கை வைத்தனர்.  இதையடுத்து சீனிவாசபுரம் ரயில்வே கேட் பகுதியில், ரயில்வே துறை மற்றும் நெடுஞ்சாலைதுறை மூலம் ரயில்வே கீழ் மட்ட பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

  சீனிவாசபுரம் ரயில்வே தண்டவாளத்தின் கீழ், மொத்தம் 400மீட்டர் தூரத்தில், இரண்டுபுறமும் இணைப்பு சாலைகளுடன் புதிய தரை மட்ட பால கட்டுமான பணி கடந்த 2014ம் ஆண்டு அக்டோபரில் துவங்கப்பட்டது. இந்த பாலம் கட்டுமான பணி பெரும்பகுதி நிறைவடைந்ததையடுத்து, சுமார் 7ஆண்டுகளுக்கு முன்பு திறப்பு விழா காணப்பட்டு, அன்று முதல் அந்த வழித்தடத்தில் வாகன போக்குவரத்து  மீண்டும் துவங்கி, நாளுக்கு நாள் அதிகமானது.

 இந்நிலையில், சீனிவாசபுரத்தில் கட்டப்பட்ட புதிய தரை மட்ட பாலத்தின்  கீழ் பகுதியில் உள்ள ரோடு முறையாக செப்பனிடவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், அதன் ஒருபகுதியில் கான்கிரீட் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிய துவங்கியது. இதன் காரணமாக, அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி விழும் அபாயம் ஏற்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் பேட்ஜ் ஒர்க் மேற்கொள்ளப்பட்டும், அப்பகுதியில் கான்கிரீட் பெயர்ந்து அடிக்கடி பெரிய அளவில் குழி ஏற்பட்டது.

  இந்த வழித்தடம், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும், கேரள பகுதியிலிருந்தும் வந்து செல்லும் பிரதான சாலையாக  உள்ளது. இந்த வழியாக பகல் மற்றும் இரவு நேரத்தில் வாகன போக்குவரத்து தொடர்ந்துள்ளது.  மழை இருக்கும்போது, சேதத்துடன் பிளைவு ஏற்பட்ட பகுதி, நாள் போக்கில் பெரிய அளவில் குழியாக மாறியது.

  எனவே, வாகன போக்குவரத்து மிகுந்த இந்த பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள ரோட்டில் ஏற்பட்ட சேத பகுதியைசம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுத்து, விபத்தை தவிர்க்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, நெடுஞ்சாதுறை மூலம், பாலத்தின் பல்வேறு இடங்களில் பேட்ஜ் ஒர்க் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், ஒவ்வொரு ஆண்டும் ஆங்காங்கே கான்கிரீட் பெயர்ந்தது, அதிகாரிகளுக்கே வேதனையை ஏற்படுத்தியது.

 இந்நிலையில், சீனிவாசபுரம் ரயில்வே தரைமட்ட பாலத்தில் விபத்தை கட்டுப்படுத்தும் வகையில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தரைமட்ட பாலத்தின் ஒரு பகுதியான சுமார் 400மீட்டர் தூரத்தில் 40மீட்டர் ரயில்வே துறை பராமரிப்பில் இருந்துள்ளது.

தற்போது சீனிவாசபுரம் தரைமட்ட பாலத்தின், ரயில்வே துறை பராமரிப்பில் இருந்த 40மீட்டர் பகுதியையும் என முழுமையாக பராமரிப்பு மேற்கொள்ள, அன்மையில் நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து ெநடுஞ்சாலைத்துறையினர் பல்வேறு ஆய்வு மேற்கொண்டு, தற்போது அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு  நகர்ந்துள்ளனர்.

  நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘பொள்ளாச்சி நகரிலிருந்து வாகனங்கள் அதிகம் வந்து செல்லும் நெஞ்சாலையில் ஒன்றான மீன்கரைரோடு சீனிவாசபுரத்தில் அமைக்கப்பட்ட தரைமட்ட பாலத்தில், ஆங்காங்கே கான்கிரீட் பெயர்ந்து வந்துள்ளது. அதனை அவ்வப்போது பேட்ஜ் ஒர்க் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் கடந்த சில மாதமாக, பெரிய அளவில் ஏற்பட்ட பள்ளமான இடத்தை, ஹாலோ பிளாக் மூலம் சமப்படுத்தி பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 சீனிவாசபுரம் ரயில்வே தரைமட்ட பாலத்தின் மொத்தமுள்ள 400மீட்டர் தூரத்தில், ரயில்வே துறை மூலம் பராமரிப்பில் இருந்த 40மீட்டர் பகுதியும், இந்த ஆண்டு முதல், முழுமையான பராமரிப்புக்காக நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தரைமட்ட பாலத்தில் மழைக்காலத்தில் தேங்கும் தண்ணீர் சீராக செல்வதற்கான நடவடிக்கைக்கான ஆய்வு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 மேலும், இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் வதிக்காக, இருபுறமும் ரிப்ளக்டர் மற்றும் தானியங்கி சிக்னல் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், தேவையான இடத்தில் வேகத்தடை அமைக்கப்படுகிறது. இந்த நடவடிக்கை விரைந்து மேற்கொள்ளப்படும். இதன் மூலம், அவ்வப்போது நடக்கும் விபத்து உள்ளிட்ட விபரீத சம்பவம் நடைபெறாமல் காத்துக்கொள்ள ஏதுவாக இருக்கும்’ என்றனர்.

மீண்டும் மின்விளக்கு ஒளிர நடவடிக்கை    
   
 மீன்கரைரோடு சீனிவாசபுரம் ரயில்வே தரைமட்ட பாலம், ஜமீன்ஊத்துக்குளி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் இருப்பதால், பாலத்தின் இருபுறமும் பேரூராட்சி மூலம் மின் விளக்கு விசதி ஏற்படுத்தப்பட்டது. ஆனால், பல மாதமாக அந்த மின்விளக்கு எரியாமல் இருந்ததுடன், அதனை பராமரிக்காமல் கிடப்பில் போடப்பட்டது. இரவு நேர வாகன ஓட்டிகள் வசதிக்காக, பேரூராட்சி மூலம் மின்விளக்கை பராமரித்து அனைத்து மின் விளக்குகளும் ஒளிர செய்வதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Vehicle Traffic High Chinivasapuram Railway Ground Bridge ,Pollachi , Pollachi: People are happy with the renovation work on Srinivasapuram railway level bridge. From Pollachi city
× RELATED பொள்ளாச்சியில் ஓய்வுபெற்ற பெண் கும்கி யானை உயிரிழப்பு..!!