×

2013ம் ஆண்டு முதல் அந்தரத்தில் தொங்கும் அவலம் அக்கரைப்பேட்டை மேம்பாலம் பயன்பாட்டுக்கு வருவது எப்போது?

*மக்கள் எதிர்பார்ப்பு

நாகப்பட்டினம் : அக்கரைப்பேட்டை மேம்பால பணிகள் முடிக்கப்படாமல் உள்ளதால் மக்கள் பயன்பாட்டுக்கு வராமல் அப்படியே விடப்பட்டுள்ளது. கடந்த 2013ம் ஆண்டு முதல் அந்தரத்தில் தொங்கும் பாலத்தை விரைவில் கட்ட வேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.நாகப்பட்டினம் மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம், நாகூர் ஆண்டவர் தர்கா, சிக்கல் சிங்காரவேலவர் கோவில் ஆகியவை உள்ளன. ஆன்மீக தலமாக விளங்கும் நாகப்பட்டினத்துக்கு தினந்தோறும் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அதே போல் நாகப்பட்டினத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு கிழக்கு கடற்கரை சாலையை சுற்றுலா பயணிகள் அதிகம் பயன்படுத்துகின்றனர்.

நாகப்பட்டினம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து தோணித்துறை ரோடு, அக்கரைப்பேட்டை, தெற்கு பொய்கைநல்லூர் வழியாகவும் வேளாங்கண்ணிக்கு நிறைய சுற்றுலா பயணிகள் செல்கின்றனர். இதற்கு காரணம் தெற்கு பொய்கைநல்லூரில் பிரசித்திப்பெற்ற கோரக்க சித்தர் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள் அக்கரைபேட்டை பாலம் வழியாக செல்வது தான் எளிதாக இருக்கும். இவ்வாறு தினந்தோறும் ஏராளமான மக்களும், உள்நாடு மற்றும் வெளிநாடு சுற்றுலா பயணிகள் அதிகம் பயன்படுத்தும் நாகப்பட்டினம் அக்கரைபேட்டை ரோட்டில் ரயில்வே கேட் உள்ளது.

நாகப்பட்டினம் ரயில்வே ஸ்டேசனில் இருந்து சிறிது தூரத்தில் தான் இந்த ரயில்வே கேட் உள்ளது. அக்கரைப்பேட்டை ரயில்வே கேட்டை தாண்டி தான் அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்கள் ஏற்றி செல்லும் வாகனங்கள், அதனை சுற்றியுள்ள ஊர் பொதுமக்கள் மற்றும் வேளாங்கண்ணிக்கு செல்பவர்கள் செல்ல வேண்டும்.

ஆனால் காரைக்காலில் இருந்து நாகப்பட்டனம் வழியாக தஞ்சை, திருச்சி செல்லும் சரக்கு ரயில்கள், பயணிகள் ரயில்கள் அடிக்கடி செல்வதால் இந்த அக்கரைப்பேட்டை ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படும். இதனால் எந்த நேரமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதனை தவிர்க்க அக்கரைபேட்டை செல்லும் சாலையில் ரயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்தனர். இதன் விளைவாக அந்த பகுதியில் ரயில்வே மேம்பாலம் கட்ட முடிவு எடுக்கப்பட்டது. இதன்படி கடந்த 2013ம் ஆண்டு திட்டம் வடிவமைப்பு பெற்றது.

முதல் கட்டமாக ரயில்வே துறை சார்பில் ரூ.13 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ரயில்வே தண்டவாளத்தின் மேல் ரயில்வே துறை சார்பில் பாலம் கட்டும் பணி நிறைவு பெற்றது. இதையடுத்து இந்த பாலத்தின் இரண்டு பகுதிகளிலும் நெடுஞ்சாலை துறை சார்பில் இணைப்பு பாலம் மற்றும் சாலை அமைக்கும் பணிகள் தொடங்காமல் இது நாள் வரை கிடப்பில் போடப்பட்டுள்ளன. நெடுஞ்சாலைத்துறை சார்பில் பணிகள் நிறைவுபெற்று ரயில்வே துறை பணிகள் தொடங்க காலதாமதம் செய்யும். ஆனால் ரயில்வே துறை பணிகளை முடித்துவிட்ட நிலையில் நெடுஞ்சாலைத்துறை பணிகளை தொடங்காமல் இருப்பது வேதனை தருகிறது.

இதனால் ரயில்வே துறை சார்பில் கட்டி முடிக்கப்பட்ட மேம்பாலம் அந்தரத்தில் தொங்கி கொண்டு உள்ளது. அதனால் ரயில்வே கேட் பூட்டினால் அந்த வழியாக செல்ல வேண்டிய வாகனம் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. ஒரு சில நேரங்களில் இரண்டு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஆபத்தை உணராமல் ரயில் அருகில் வரும் வரை தங்களது இரண்டு சக்கர வாகனத்தை தூக்கிகொண்டு தண்டவாளத்தை கடந்த செல்கின்றனர்.இதுகுறித்து இந்திய தேசிய மீனவர் சங்க தலைவர் ராஜேந்திர நாட்டார் கூறியதாவது:

அக்கரைப்பேட்டை செல்லும் பகுதியில் மேம்பாலம் கட்ட நெடுஞ்சாலை துறை சார்பில் நிலம் கையகப்படுத்தி நிதியும் ஒதுக்கீடு செய்துள்ளது. ஆண்டுகள் பல கடந்தும் இதுநாள் வரை மேம்பாலம் கட்டப்படவில்லை. இதனால் ரயில்வே நிர்வாகம் சார்பில் கட்டப்பட்ட பாலம் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. கடந்த 2013ம் ஆண்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதா கட்டுமான பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்தார். இதன்பின்னர் அவர்கள் இடையே ஏற்பட்ட உள்கட்சி பூசல் காரணமாக பாலம் கட்ட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த பாலம் கட்ட ஒதுக்கப்பட்ட நிதி எங்கே சென்றது என தெரியவில்லை.

நாகப்பட்டினம் மீனவர்கள் அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்களை பிடித்து வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர். இந்த ரயில்வே பாலத்தை கடந்து தான் செல்ல வேண்டும். ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால் நீண்ட நேரம் நிற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்து விடுகிறது. இதனால் குறிப்பிட்ட நேரத்துக்கு மீன்களை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. காலம் தாழ்த்தப்படுவதால் மீன்களுக்கான சரியான விலையும் கிடைப்பதில்லை. சரக்கு ரயில் சென்றால் எப்பொழுது கேட் திறப்பார்கள் என்று தெரியாது. அந்த அளவிற்கு நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது.

பள்ளி, கல்லூரிகளுக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு மாணவர்கள் செல்ல முடியவில்லை. கிடப்பில் போடப்பட்டுள்ள அக்கரைபேட்டை பாலத்தால் எல்லாதரப்பு மக்களும் பாதிக்கப்படுகின்றனர் மீன் ஏற்றி செல்லும் வாகனங்கள் மற்றும் மீன் வாங்க வரும் வாகனங்கள், ஷேர் ஆட்டோ, மோட்டார் சைக்கிள்கள் என அனைத்தும் நாகப்பட்டினம் பழைய பஸ்ஸ்டாண்ட், முதலாவது கடற்கரை சாலையில் வரிசை கட்டி நிற்கின்றன. இந்த பாலத்தின் பணிகளை விரைந்து முடிக்கவில்லை என்றால் அக்கரைப்பேட்டை பகுதி பொதுமக்கள் ஒன்றாக திரண்டு போராட்டம் நடத்துவதாக அறிவிப்பு செய்திருந்தோம்.

இந்நிலையில் கலெக்டர் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்து பாலம் பணிகள் விரைந்து முடிக்கப்படும் என தெரிவித்தனர். தஞ்சாவூர் நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் நிர்மலா, இந்த பாலத்தின் பணிகளை முடிக்க கடந்த 2022ம் நிதியாண்டில் மானிய கோரிக்கையில் வைக்கப்பட்டுள்ளது.

நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டு நில எடுப்பு பணிகள் வருவாய்த்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே போராட்டம் கைவிடப்பட வேண்டும் என கடந்த 4 மாத காலத்திற்கு முன்பு கடிதம் வாயிலாக தெரிவித்தனர். ஆனால் அந்த கடிதம் எழுத்து வடிவில் தான் உள்ளது. பணிகள் தொடங்க இன்று வரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.

எனவே அக்கரைபேட்டை ரயில்வே மேம்பால பணிகளை விரைவில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டும். இல்லையெனில் அறப்போராட்டம் நடத்துவதை தவிர வேறு வழியில்லை என்றார்.

தாமதம் ஏன்? அதிகாரி விளக்கம்

நெடுஞ்சாலைத்துறை அதிகாரி கூறுகையில், நாகை அக்கரைபேட்டை ரயில்வே மேம்பாலத்துக்கான இணைப்பு மேம்பால சாலை அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்த நெடுஞ்சாலைத்துறை சார்பில் 2013ம் ஆண்டு ரூ.23 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ரயில்வே துறை சார்பில் ரயில்வே கேட் இருக்கும் பகுதியில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் இரண்டு பகுதிகளில் இருந்து இரு புறங்களிலும் 400 மீட்டர் நீலத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் இணைப்பு பாலம் கட்டுவதாக இருந்தது.

அதற்காக நிலம் கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வந்தோம். அதில் நில உரிமையாளர்கள் இடத்துக்கு அதிக விலை கேட்கிறார்கள். சிலர் இடத்தின் ஒரு பகுதியை மட்டும் தருகிறோம் என்கிறார்கள். இது தவிர சிலர் எதிர்ப்பும் தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக கடந்த மார்ச் மாதம் பொதுமக்களின் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. இந்த நிலம் கையகப்படுத்தும் பணி விரைவில் முடியும் என்றார்.

Tags : Nagapattinam: The Akkarippet flyover has not been completed and has been left unutilized.
× RELATED மாநகரப் பேருந்துகள் நிற்காமல்...