×

பவானியில் 249 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது நிவாரண முகாம்களில் 850 பேர் தஞ்சம்

பவானி : காவிரி ஆற்றில் விநாடிக்கு 2.10 லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பவானி பகுதியில் 249 வீடுகளில் வெள்ளம் புகுந்தது. இதனால், 859 பேர் உடைமைகளுடன் வெளியேற்றப்பட்டு, 9 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. இதனால், அணை முழு கொள்ளவை எட்டிய நிலையில் கடந்த மூன்று நாட்களாக உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு 1.75 லட்சம் கன அடி வெளியேறிய நிலையில், நேற்று 2.10 லட்சம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இதனால், காவிரி ஆற்றில் பெருத்த ஓசையுடன் வெள்ளநீர் ஓடி வருகிறது.

பவானியின் கரையோரப் பகுதியில் நேற்று காலை முதல் படிப்படியாக நீர்வரத்து அதிகரித்தது. இதனால், பவானி நகராட்சி பகுதியில் கந்தன் நகர், காவேரி நகர், தினசரி மார்க்கெட் வீதி, பசுவேஸ்வரர் வீதி, பவானி புதிய பஸ் நிலையம், காவேரி வீதி,பாலக்கரை வீதி,வெற்றிலை படிக்கட்டு, கடப்பநல்லூர் ஊராட்சிப் பகுதியில் 10 வீடுகள், குருப்பநாயக்கன்பாளையம் ஊராட்சி, நேதாஜி நகரில் 48 வீடுகள் என மொத்தம் 249 வீடுகளுக்குள் புகுந்தது. இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் 859 பேர் உடைமைகளுடன் வெளியேற்றப்பட்டு, 9 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், காவிரி ஆற்று வெள்ளம் பவானி தினசரி மார்க்கெட் அருகே எரிவாயு தகனமேடை உள்ள மயானத்துக்குள் புகுந்தது.

அப்பகுதியில் உள்ள விநாயகர் கோயிலையும் சூழ்ந்தது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த நிலையில் நேற்று மாலையில் தினசரி மார்க்கெட்டில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் உட்புகுந்து தேங்கியது. இதைக் கண்ட தினசரி மார்க்கெட் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். காவிரி வெள்ளம் பவானி ஆற்றில் புகுந்ததால் பழைய பஸ் நிலையம் கரையோரத்தில் உள்ள குப்பம் பகுதியைச் சேர்ந்த 29 வீடுகளில் வசித்த 84 பேர் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தங்க வைக்கப்பட்டனர்.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பவானி தாசில்தார் முத்துக்கிருஷ்ணன், துணை தாசில்தார் சரவணன், வருவாய் ஆய்வாளர் விஜய் கோகுல் கொண்ட குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.வெள்ளம் சூழ்ந்த பகுதியில் பவானி நகராட்சி தலைவர் சிந்தூரி இளங்கோவன், நகராட்சி ஆணையாளர் தாமரை, திமுக நகரச் செயலாளர் ப.சீ.நாகராஜன், கவுன்சிலர்கள் சரவணன், துரைராஜா, பாரதிராஜா, மோகன்ராஜ்,  கார்த்திகேயன், ரவி, ஜெகதீஸ் உள்ளிட்டோர் பார்வையிட்டதோடு, வெள்ளம் பாதித்த மக்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர்.

பாலத்தில் போக்குவரத்து நிறுத்தம் :  ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்ததால் ஈரோடு மாவட்டம் பவானிக்கும்,  நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்துக்கும் இடையே உள்ள ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட மிகப் பழமை வாய்ந்த பாலத்தில் வாகன போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இங்கு, ஏராளமானோர் வேடிக்கை பார்க்க திரண்டு வருவதாலும், பாலத்தின் வலிமை குறைந்துள்ளதாலும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பவானி டிஎஸ்பி அமிர்தவர்ஷினி மற்றும் போலீஸார் பொதுமக்கள் வெள்ளத்தில் இறங்காதபடி தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு பவானி எம்எல்ஏ கே.சி.கருப்பணன், அதிமுக நகர செயலாளர் சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் நேரில் சென்று பார்வையிட்டதோடு, வெள்ளத்துக்கு மத்தியில் வீடுகளில் இருந்த பொதுமக்களை பாதுகாப்புடன் மேடான பகுதிக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர்.

மின் இணைப்பு துண்டிப்பு : பவானி புதிய பஸ் நிலையம் தொடங்கி, பவானி கூடுதுறை மற்றும் பழைய பஸ் நிலையம் வரையில் கரையோரப் பகுதி குடியிருப்புகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளதால் மின்வாரிய அதிகாரிகள் 250-க்கும் மேற்பட்ட வீடுகளின் மின் இணைப்பை துண்டித்தனர். வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் மின்கசிவால் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், காவிரி ஆற்றில் மேலும் வெள்ளத்தின் வரத்து அதிகரிக்கும் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுவதால் கரையோரப் பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பு நிலை வருகிறது.

Tags : Bhavani , Bhawani: 249 houses in Bhawani area were affected by the flood caused by the release of 2.10 lakh cubic feet of water per second in Cauvery river.
× RELATED பாவங்களைப் போக்கும் பவானி அம்மன்