×

வயிற்றுக்குள் கத்திரிக்கோல் வைத்து தைத்த விவகாரம்; பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு: மனித உரிமை ஆணையம் உத்தரவு

சென்னை: பிரசவத்தின் போது கத்திரிகோல் வைத்து தைத்ததால் 12 ஆண்டுகள் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று மாநில  மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகில் உள்ள வி.கே.ஆர்.புரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. தனியார் நிறுவன காவலாளி. இவரது மனைவி குபேந்திரி கடந்த 2008ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிரசவத்துக்காக திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அதன் பின் அவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. மேலும் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் பரிசோதித்த போது, அவரது வயிற்றில் கத்திரிகோல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

12 ஆண்டுகளுக்கு பின், சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை மூலம் கத்திரிகோல் அகற்றப்பட்டது.
இதையடுத்து மனைவியின் வயிற்றில் கத்திரிகோலை வைத்து தைத்து அஜாக்கிரதையாக செயல்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாலாஜி, முதல்வரின் தனிப்பிரிவில் புகார் அளித்தார். இதுசம்பந்தமாக பத்திரிக்கைகளில் வந்த ெசய்தியின் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அதன்படி  மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் துரை.

ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவில், திருவள்ளூர் சுகாதார பணிகள் இணை இயக்குனர் அளித்த அறிக்கை உள்ளிட்ட ஆதாரங்களில் இருந்து, மருத்துவர்கள் அஜாக்கிரதையாக செயல்பட்டுள்ளது நிரூபணமாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அறுவை சிகிச்சையை எச்சரிக்கையுடன் செய்திருந்தால், குபேந்திரி வயிற்றில் கத்திரிக்கோல் வைத்து தைத்திருக்க மாட்டார்கள். மேலும் 12 ஆண்டுகள் அப்பெண்ணும் வலியில் துடித்திருக்க மாட்டார் எனக் கூறிய ஆணைய உறுப்பினர், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடாக தமிழக அரசு நான்கு வாரங்களில் வழங்க வேண்டும் என்று மாநில மனித உரிமை ஆணையம்  உத்தரவிட்டுள்ளது.

Tags : Human Rights Commission , Scissors stitched into the stomach; The victim received Rs. 10 lakh compensation: Human Rights Commission orders
× RELATED தூத்துக்குடி துப்பாக்கி சூடு...