×

மக்கள் நலப்பணியாளர்கள் விவகாரம் நிரந்தர சட்டம் உருவாக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: மக்கள் நலப்பணியாளர்கள் வாழ்வாதாரத்தை பாதிக்காத விதமாக ஒரு நிரந்தர சட்டத்தை உருவாக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மக்கள் நலப்பணியாளர்கள் சுமார் 13,500 பேர் கடந்த 2011ம் ஆண்டு பணியிலிருந்து அப்போதைய அதிமுக அரசால் நீக்கப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவானது நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் வழக்கறிஞர் குமணன் ஆகியோர், ‘‘மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் மாதம் ரூ.7500 ஊதியம் வரும் வகையில் பணியும், கடந்த பத்து ஆண்டுகளில் இறந்துபோன மக்கள் நலப்பணியாளர்களின் சட்டப்படியான வாரிசுகளுக்கும் மீண்டும் வேலையும் வழங்கப்படும் என புதிய கொள்கை முடிவு சட்டமன்றத்திலேயே அறிவிக்கப்பட்டது. இதனை பெரும்பான்மையானவர்கள் ஏற்றுக்கொண்டனர். ஒரு சிலர் மட்டுமே எதிர்கின்றனர்’’ என தெரிவித்தனர்.

மக்கள் நலப்பணியாளர் விழுப்புரம் தன்ராஜ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹரிப்பிரியா, ‘‘இந்த விவகாரம் அரசியல் ரீதியாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் ஒரு கட்சி ஆட்சியில் இருக்கும் அவர்களை பணி நீக்கம் செய்கின்றனர். மற்றொரு கட்சி ஆட்சிக்கு வந்தால் மீண்டும் பணி வழங்குகின்றனர். இதில் மக்கள் நலப்பணியாளர்கள் அலைக்கழிக்கப் படுகிறார்கள். அவர்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது’’ என்றார்.

இதைக் கேட்ட நீதிபதி அஜய் ரஸ்தோகி, ‘‘மக்கள் நலப்பணியாளர்கள் விவகாரத்தில் தற்போது தமிழக அரசு எடுத்துள்ள புதிய கொள்கையானது வரும் காலத்திலும் தொடருமா? ஏன் கேட்கிறோம் என்றால் அவர்களின் வேலைக்கான பாதுகாப்பு மற்றும் உத்திரவாதம் தேவைப்படுகிறது. இருவேறு அரசியல் கட்சிகளால் அவர்களின் வாழ்வாதாரத்தை பந்தாடக் கூடாது. அதுகுறித்து தமிழக அரசு ஒரு நிரந்தர சட்டத்தை அமைச்சரவையின் மூலம் உருவாக்க வேண்டும்’’ என தெரிவித்து, வழக்கை வரும் 11ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Tags : Supreme Court , The Supreme Court ordered to make a permanent law on the issue of public welfare workers
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...