×

நாமக்கல் குமாரபாளையத்தில் குடியிருப்புகளுக்குள் புகுந்த தண்ணீர்: வெள்ளத்தில் சிக்கியவர்கள் பாதுகாப்புடன் வெளியேற்றம்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் காவிரி ஆற்றின் வெள்ளப்பெருக்கு காரணமாக குடியிருப்புகளில் இருந்து வெளியேற மறுத்த பொதுமக்களை வருவாய் கோட்டாட்சியர் வெளியேறுமாறு வலியுறுத்தினார். காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதுவரை மேட்டூர் அணையிலிருந்து 1.40லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் உள்ள காவிரி கரையோர பகுதிகளான இந்திராநகர், கலைவாணர் தெரு, மணிமேகலை வீதி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 80-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது. கடந்த மாதம் இதேபோல் நீர் புகுந்ததால் சுமார் 80 குடும்பத்தினர் வெளியேற்றப்பட்டனர். பின்பு, நீர் வடிந்ததும் மீண்டும் தங்களது வீட்டில் தங்க அனுமதிக்கப்பட்டனர்.

அதேபோல் நேற்று இரவும் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததால் அங்குள்ள பொதுமக்களை வருவாய்துறையினரும், நகராட்சி அதிகாரிகளும் வெளியேற அறிவுறுத்தினார். ஆனால், பொதுமக்கள் அங்கிருந்து வெளியேற மறுப்பு தெரிவித்தனர். இவர்களுக்காக குமராபாளையம் நகராட்சி சார்பாக ஒரு மண்டபமும், தனியார் மண்டபமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில், தற்போது 50 குடும்பத்தினர் மட்டுமே தங்கியுள்ளனர்; ஆனால் மீதமுள்ள 30 குடும்பங்கள் அங்கிருந்து வெளியேறாமல் குடியிருப்பிலேயே இருந்த வண்ணம் உள்ளனர். இப்பகுதியில் நீரானது அதிகளவில் சூழ்ந்துள்ளதால் பெரும் ஆபத்து ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், வருவாய்துறையினர், காவல்துறை உதவியுடன் அப்பகுதி மக்களை எச்சரித்தும், அவர்கள் வெளியேற மறுத்துவிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர், உடனடியாக குமாரபாளையம் பகுதியில் உள்ள மக்களை சந்தித்து, வெள்ள அபாய எச்சரிக்கை குறித்து விவரித்து, உடனடியாக வெளியே அறிவுறுத்தினார்.           


Tags : Namakkal Kumarapalam , Namakkal, Kumarapalayam, Residence, Water, Flood, Evacuation
× RELATED பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் தகுதி...