×

மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் சீரான மின் விநியோகம் தர நடவடிக்கை எடுக்கப்படும்: மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி

சென்னை: சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை  விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் எந்த விதமான பாதிப்புகளும் இல்லாத  அளவிற்கு சீரான மின் விநியோகத்திற்காக அனைத்து முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருக்கின்றன என தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.  மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தமிழகத்தின் சில மாவட்டங்களில் வரும் நாட்களில் எதிர்பார்க்கப்படும் கனமழை குறித்து மின்துறை சார்பாக எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றிவிரிவான ஆய்வினை காணொளி காட்சி மூலமாக நடத்தினார்.

இதில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி, இயக்குநர் சிவலிங்கராஜன், தலைமைப் பொறியாளர்கள், மேற்பார்வை பொறியாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.இந்த ஆய்வுக் கூட்டத்தில் சிகப்பு எச்சரிக்கை விடுத்த மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் திண்டுக்கல், ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த மாவட்டங்களான விருதுநகர், ஈரோடு, மதுரை, மேலும், மஞ்சள் எச்சரிக்கை விடுத்த மாவட்டங்களான தூத்துக்குடி, திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், இராணிப்பேட்டை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களின் தலைமைப் பொறியாளர்களுடனும் மற்றும் மேற்பார்வை பொறியாளர்களுடனும் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவான ஆய்வினை நடத்தினார்.  

பின்னர், அமைச்சர் செந்தில் பாலாஜி அளித்த பேட்டி:  இன்னும் இரண்டு மூன்று நாட்களில் வரக்கூடிய மழையை எதிர்கொள்வதற்கு உயர் அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டு அந்தந்த மாவட்டங்களில் சீரான மின் விநியோகத்திற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.  தூத்துகுடியை எடுத்துக் கொண்டால் 12 இடங்களில் பாதிப்பு இருக்கின்றது. எனவே, இந்த மழைக்காலத்தைப் பொறுத்தவரையில் இந்த மழையை எதிர்கொள்வதற்கு மின்சார வாரியம் தயாராக இருக்கிறது.  ஒன்றிய அரசு ஒரு டன்  நிலக்கரிக்கு 203 டாலர் கொடுத்து வாங்க ஆர்டர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.  ஆனால் தமிழ்நாட்டில் ஒரு டன்  நிலக்கரி 143 டாலருக்கு மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்றார். இவ்வாறு அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.

Tags : Power Minister ,Senthil Balaji , Steps will be taken to ensure regular power supply in districts where rain warning has been issued: Power Minister Senthil Balaji interview
× RELATED சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட...