×

நடிகை சித்ரா மரண வழக்கில் கணவர் ஹேம்நாத் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு

சென்னை: சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கில் கணவர் ஹேம்நாத் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக்கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி நசரத்பேட்டை பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட நசரத்பேட்டை போலீசார், அவரது கணவர் ஹேம்நாத், அவரது பெற்றோர் உள்ளிட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக கூறப்பட்ட புகாரின் பேரில் ஹேம்நாத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். கைதான ஹேம்நாத் 60 நாட்கள் சிறையில் இருந்து பின்னர் ஜாமினில் வெளிவந்தார்.

இந்நிலையில், ஹேம்நாத் மீது போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ஹேம்நாத்திற்கு எதிராக போலீசார் தாக்கல் செய்திருந்த குற்றப்பத்திரிகைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் சில விலக்குகளையும் அளித்து இருந்தது.

அதனையடுத்து, சித்ராவின் தந்தை சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஹேம்நாத் மீதான வழக்கை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்து சித்ராவின் தந்தை தரப்பில் வாதிடப்பட்டது.

ஹேம்நாத் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் உள்ளதால் குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய முடியாது என நீதிபதி தெரிவித்தார். விசாரணை நீதிமன்றத்தில் விசாரணையை எதிர்கொள்ளவும் ஹேம்நாத் தரப்புக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Tags : Hemnath ,Chitra , Court refuses to quash charge sheet against husband Hemnath in actress Chitra death case
× RELATED சித்ரா பௌர்ணமி ஏன் கொண்டாடப்படுகிறது?