×

நாளை ஆடிப்பெருக்கு விழா கொண்டாட குளித்தலை கடம்பன்துறைக்கு காவிரிநீர் வந்து சேருமா?: பொதுமக்கள் எதிர்பார்ப்பு

குளித்தலை: கரூர் மாவட்டம் குளித்தலை காவிரிகடம்பன்துறை காசிக்கு அடுத்து வடக்கு நோக்கி இருக்கும் சிவ தலங்களில் கடம்பவனேஸ்வரர்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாக திகழ்ந்து வருகிறது.இக்கோயிலுக்கு சுற்று வட்டாரத்தில் இருந்தும், வெளி மாவட்டத்தில் இருந்தும் ஏராளமானோர் தினந்தோறும் வருகை தந்து புனித நீராடி கடம்பவனேஸ்வரரை வணங்கி செல்வது வழக்கமாக இருந்து வருகிறது. மேலும் சுற்றுவட்டார கிராம பகுதி மக்கள் கிராம கோவில்களுக்கு திருவிழா காலங்களில் பால்குடம். தீர்த்த குடம், அக்னி சட்டி, அலகு குத்துதல் போன்ற நிகழ்ச்சிகளுக்கு குளித்தலை கடம்பன்துறை காவிரி ஆற்றில் நீராடி எடுத்துச் செல்வார்கள். இங்கு ஆண்டுதோறும் தை மாதம் தைப்பூசத்தன்று தைப்பூச திருவிழா சிறப்பாக நடைபெறும். அப்போது எட்டுஊர் சாமிகள் ஒன்று கூடி தீர்த்தவாரி நடைபெறும்.

இதில் எட்டு ஊர்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இத்தனை சிறப்பு வாய்ந்த குளித்தலை காவேரி கடம்பன்துறை பகுதியில் நாளை ஆடிப்பெருக்கு விழா வெகு விமர்சையாக சில ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற உள்ளது.இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்மழை காரணமாக மேட்டூர் அணையில் நீர் நிரம்பியது. இதனால் தமிழக அரசு உத்தரவுப்படி சில தினங்களுக்கு முன்பு ஒரு லட்சத்து 18 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் கரூர் மாவட்டம் குளித்தலை காவேரி கடம்பன் துறையை தண்ணீர் தொட்டுச் சென்றது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் சில தினங்களுக்கு பின்பு தண்ணீர் குறைந்து ஆற்றில் தண்ணீர் இருப்பு குறைந்து விட்டது.

இதனால் நாளை ஆடிப்பெருக்கு விழா நடைபெறும் நிலையில் நேற்று மேட்டூர் அணையில் இருந்து 40 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆடிப்பெருக்கு விழாவில் இப்பகுதியில் சுற்றுவட்டாரத்தில் இருந்து ஆயிரக்கணக்கான புதுமண தம்பதிகள் வருகை தந்து காவிரியை வணங்கிச் செல்வது வழக்கமாக இருந்து வருகிறது. தற்போது உள்ள நிலையில் காவிரி ஆற்றில் தண்ணீர் உள்வாங்கி உள்ளது. மீண்டும் மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் நாளை குளித்தலை கடம்பன்துறை படித்துறை வரை வந்து சேருமா என பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டுள்ளனர்.

Tags : Kadampanthurai ,Adiperku festival , Will Cauvery water reach Kadampanthurai to celebrate Adiperku festival tomorrow?: public expectation
× RELATED ஆடிப்பெருக்கு திருவிழா: தருமபுரி மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை