×

சனி, ஞாயிறு தொடர் விடுமுறையால் கவியருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள் : 2 நாட்களில் ரூ.1.5 லட்சம் வருவாய்

ஆனைமலை:  ஆனைமலை அருகே உள்ள கவியருவிக்கு 2 நாட்களாக சுற்றுலாப் பயணிகள் வருகை அதிக அளவில் இருந்ததால், வனத்துறைக்கு சுமார் ரூ.1.5 லட்சம் வருவாய் கிடைத்து உள்ளது.கோவை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களாக உள்ள பொள்ளாச்சியை அடுத்த ஆழியாறு அணை பூங்கா, பட்டாம்பூச்சி பூங்கா, கவியருவி உள்ளிட்ட பகுதிகள் விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்தோடு வந்து இயற்கை அழகை ரசித்து செல்கின்றனர். மேலும், ஆழியார்-வால்பாறை சாலையில் அமைந்துள்ள கவியருவியில் குளிப்பதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் 13ம் தேதி வறட்சி காரணமாக தண்ணீரின்றி இருந்த கவியருவி வனத்துறை சார்பில் மூடப்பட்டது. இந்நிலையில், தொடர்ச்சியாக கொரோனா பரவல் மற்றும் தென்மேற்கு பருவமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அருவி கடந்த 6 மாதங்களுக்கு மேலாக மூடி கிடந்தது. தற்போது, பருவ மழை குறைந்து அருவிக்கு வரும் தண்ணீரின் அளவு சீரானதால், கடந்த 27ம் தேதி முதல் மீண்டும் அருவி திறக்கப்பட்டது. இதனை அறிந்த சுற்றுலா பயணிகள் அருவிக்கு வரத் தொடங்கினர்.

 சனி மற்றும் ஞாயிறு தொடர் விடுமுறையால் வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்தது. அவ்வாறு வந்த சுற்றுலா பயணிகள் ரம்மியமாக கொட்டும் தண்ணீரில் குடும்பத்ததோடு குளித்து மகிழ்ந்தனர். சுற்றுலாப் பயணிகள் கூறுகையில்,‘‘2 ஆண்டுகளாக கொரோனா மற்றும் பல்வேறு இன்னல்கள் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்த  நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு கவி அருவி திறக்கப்பட்டதால், குடும்பத்தோடு வந்து அருவியில் குளித்து மகிழ்ந்தோம். அருவியில்  சில்லென்று கொட்டும் தண்ணீரில் குளித்தது உற்சாகத்தை ஏற்படுத்தியது’’ என்றார்.
வனத்துறை அதிகாரிகள் கூறுகையில்,``கவியருவி மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால் முன்கூட்டியே தடுப்பு கம்பிகள் அனைத்தும் அமைக்கப்பட்டு உடை மாற்றும் அறைகளும் சீரமைக்கப்பட்டது. சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து இருந்ததால் கூடுதலாக வனத்துறை ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், கடந்த 2 தினங்களில் மட்டும் கவியருவிக்கு சுமார் 3,000 சுற்றுலா பயணிகள் வந்து சென்றதாகவும், இதனால், சுமார் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வருவாய் கிடைத்துள்ளது’’என்றனர்.


Tags : Kaviyaruwi , Saturday and Sunday are holidays Tourists flock to Kaviaruvi : In 2 days 1.5 lakh revenue of Rs
× RELATED விடுமுறை தினத்தையொட்டி கவியருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்