×

கெட்டுப்போன மெத்தனாலை சாராயத்தில் கலந்து விற்றது அம்பலம்: முக்கிய குற்றவாளி உட்பட 7 பேர் கைது: பரபரப்பு தகவல்

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் மெத்தனால் கலந்த விஷ சாராயம் குடித்தவர்களில் இதுவரை 52 பேர் உயிரிழந்து உள்ளனர். இவர்களுக்கு விஷ சாராயம் விற்ற கன்னுக்குட்டி (எ) கோவிந்தராஜ், அவருடைய மனைவி விஜயா, சகோதரர் தாமோதரன் ஆகியோர் மீது 328, 304, 4(1i), 4(1a) ஆகிய நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். முன்னதாக அவர்களிடம் சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில், மெத்தனால் கலந்த சாராயத்தை சின்னதுரை என்ற வியாபாரியிடம் இருந்து கன்னுக்குடி வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து பிரபல சாராய வியாபாரியான சின்னதுரையை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், மெத்தனாலை மொத்தமாக சப்ளை செய்யும் வியாபாரியான புதுச்சேரி மடுகரையைச் சேர்ந்த மாதேஷ், சங்கராபுரம் ஜோசப் ராஜா, புதுச்சேரியைச் சேர்ந்த சாராய வியாபாரி ராமர் மகன் முத்து ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கெட்டுப்போன மெத்தானால் என தெரிந்தும் ,அதை விற்றதால் மனித உயிர்கள் பறிபோன கொடூரம் நடந்துள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து சிபிசிஐடி போலீசார் கூறியதாவது: மெத்தனால் மொத்த வியாபாரியான புதுச்சேரி மடுகரை மாதேஷ் தனது கூட்டாளிகளான ஜோசப் ராஜா, முத்து உள்ளிட்டோருடன் அவ்வப்போது ஆந்திரா சென்று அங்குள்ள ரசாயன தொழிற்சாலையில் இருந்து மெத்தனாலை வாங்கி வந்து சப்ளை செய்து வருகிறார். சமீபத்தில் ஆந்திராவில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் இருந்து கெட்டுப்போன மெத்தனாலை மாதேஷ் வாங்கி வந்து உள்ளார். இதை ேஜாசப் ராஜாவிடம் கொடுத்து பிரபல சாராய வியாபாரியான சின்னதுரையிடம் விற்று உள்ளார். அவர் கெட்டுப்போன மெத்தனாலை, கடந்த 17ம்தேதி கள்ளக்குறிச்சி அடுத்த சூலாங்குறிச்சி பகுதிக்கு கோவிந்தராஜன் (எ) கன்னுக்குட்டியை வரவழைத்து 60 லிட்டர் (4டியூப்), 30 லிட்டர் (3டியூப்) 3 சிறிய பாக்கெட் விஷசாராயத்தை முன்பணம் வாங்கி விற்றுள்ளார். கன்னுக்குட்டி சாராயம் குடிக்காதவர் என்பதால், அதை வாங்கி, தனது தம்பி தாமோதரனிடம் அதை கொடுத்து குடித்து பார்க்குமாறு கூறி உள்ளார்.

அவர் நக்கி பார்த்துவிட்டு கெட்டுபோய் இருக்கு என்று கூறி உள்ளார். ஆனால் சின்னதுரை, உயர்ரக சரக்கு எனக்கூறி விற்குமாறு கூறவே அதை உடனே சாராயத்தில் கலந்து மறுநாள் கன்னுக்குடி விற்று உள்ளார். அது குட்டித்துதான் இவ்வளவு உயிர்கள் பறிபோய் உள்ளது. மெத்தனாலை ஆந்திராவில் இருந்து வாங்கி வரும் மாதேஷ், அதை ரயில் மூலமாக சென்னை கொண்டு வந்து, அங்கிருந்து புதுச்சேரி மற்றும் சங்கராபுரம் பகுதிக்கு எடுத்துச் சென்று சப்ளை செய்து உள்ளார். இவ்வாறு சிபிசிஐடி போலீசார் தெரிவித்தனர். பிடிபட்ட சின்னதுரை, கோவிந்தராஜன் தரப்பிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கெட்டுப்போன மெத்தனால் கலந்த ரசாயன டியூப்களை பரிசோதனைக்காக தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. எந்த நிறுவனத்திடம் இருந்து இந்த மெத்தனால் வாங்கப்பட்டது, மேலும் யார், யாருக்கு இதில் தொடர்பு உள்ளது என 4 பேரிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பலி எண்ணிக்கை 52 ஆக உயர்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கடந்த 18ம் தேதி பாக்கெட்டில் அடைத்து விற்கப்பட்ட மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை குடித்த 100க்கும் மேற்பட்டோருக்கு திடீரென வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்று வலி ஏற்பட்டு கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் தீவிர சிசிச்சை பலனின்றி நேற்று முன்தினம் வரை 43 பேர் உயிரிழந்தனர். பலர் கவலைகிடமாக இருந்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சேலம் மற்றும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நாகப்பிள்ளை (39), பாலு (50), தர் (40), சோலைமுத்து (65), வஉசி நகர் ராஜேந்திரன் (60), கோட்டைமேடு ராஜேந்திரன் (55), சென்னை ராஜா (43), மாதச்சேரி வீரமுத்து (33) உள்ளிட்ட 9 பேர் நேற்று உயிரிழந்தனர்.

இதுவரை கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 27 பேர், சேலத்தில் 16 பேர், விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் 4 பேர், ஜிப்மரில் 3 பேர் உள்பட மொத்தம் 52 பேர் பலியாகி உள்ளனர். இந்த 4 மருத்துவமனைகளிலும் பாதிக்கப்பட்ட 110க்கும் மேற்பட்டோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 25 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு சிறப்பு மருத்துவ குழுவினர் 24 மணி நேர கண்காணிப்பில் சிகிச்சை அளித்து வருகின்றனர். சிகிச்சையில் உள்ள மற்ற நபர்களில் சிலரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, கருணாபுரத்தில் விஷ சாராயம் குடித்து வெளியூர்களுக்கு சென்ற சிலருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் வேலூர் மற்றும் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு நபர் ஆணையம் விசாரணை தொடங்கியது

விஷ சாராயம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணைய ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் நேற்று கள்ளக்குறிச்சியில் விசாரணையை தொடங்கினார். முதல் கட்டமாக கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பிரசாந்த், எஸ்பி சதுர்வேதி மற்றும் சுகாதாரத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட துறை அதிகாரிகளுடன் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீதிபதி கோகுல்தாஸ் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக இதுவரை எடுத்த நடவடிக்கைகள், மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவாக கேட்டறிந்தார். அதேபோல் தற்போது கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்கள் விவரங்களும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருபவர்களின் விவரங்களையும் கேட்டறிந்தார்.

அப்போது, கலெக்டர், எஸ்பி மற்றும் துறை அதிகாரிகள் தெரிவித்த பதில்களை ஓய்வு பெற்ற நீதிபதி பதிவுசெய்து கொண்டார். பின்னர் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை முடித்துக் கொண்ட ஆணைய ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் சாராய விற்பனை நடைபெற்ற கருணாபுரம் பகுதிக்கு சென்று பார்வையிட்டார். தொடர்ந்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து விசாரணை நடத்தினார். சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களிடமும், மருத்துவ குழுவினரிடமும் விசாரணை மேற்கொண்டார். இந்த ஆணையம் 3 மாதத்தில் விசாரணையை முடித்து அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கெட்டுப்போன மெத்தனாலை சாராயத்தில் கலந்து விற்றது அம்பலம்: முக்கிய குற்றவாளி உட்பட 7 பேர் கைது: பரபரப்பு தகவல் appeared first on Dinakaran.

Tags : Kallakurichi Karunapuram ,Kannukutty (A) Govindaraj ,Vijaya ,Damodaran ,Ambalam ,Dinakaran ,
× RELATED கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில்...