ஆடி தள்ளுபடி விற்பனை, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை எதிரொலி பஜார் வீதிகளில் மக்கள் வெள்ளம்: விரும்பிய பொருட்களை அள்ளி சென்றனர்

சென்னை: ஆடி தள்ளுபடி சலுகை விற்பனை மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் எதிரொலியாக சென்னை பஜார் வீதிகளில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது. விரும்பிய பொருட்களை சலுகை விலையில் அள்ளி சென்றனர். அதே நேரத்தில் கடற்கரை, பூங்காக்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இந்த ஆண்டு ஆடி மாதம் கடந்த 17ம் தேதி தொடங்கியது. வருகிற 16ம் தேதி வரை ஆடி மாதம் உள்ளது. ஆடி மாதம் என்றாலே அம்மன் கோயில் திருவிழாக்களுக்கு அடுத்தபடியாக மக்களின் நினைவுக்கு வருவது தள்ளுபடி விற்பனை தான்.

ஆடி மாதத்தில் ஜவுளி பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை தள்ளுபடி விலையில் வாங்கலாம் என்பதால் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகளால் ஆடி மாதம் களையிழந்து காணப்பட்டது. இந்தாண்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் தள்ளுபடியை நினைவூட்டும் ஆடி மாதம் கடந்த 16ம் தேதி பிறந்ததையொட்டி அன்று முதல் கடைகளில் ஆடித்தள்ளுபடி விற்பனை அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து சென்னையில் முக்கிய வர்த்தக பகுதிகளான தி.நகர், புரசைவாக்கம், பெரம்பூர், வண்ணாரப்பேட்டை, மயிலாப்பூர் உள்பட இடங்களில் உள்ள ஜவுளி கடைகளில் ஆடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டது. அதாவது, ஒரு சட்டை வாங்கினால் ஒன்று இலவசம், ஒரு சேலை வாங்கினால் இன்னொரு சேலை இலவசம், ஒரு பேன்ட் வாங்கினால் இன்னொரு பேண்ட் இலவசம், 40 முதல் 50 சதவீதம் என்று பல்வேறு கவர்ச்சிக்கரமான தள்ளுபடிகளை துணிக்கடைகள் அறிவித்தன.

இதே போல எலக்ட்ரானிக் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளும் ஆடித்தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளன. இதனால், ஆடி மாதம் தொடங்கியதில் இருந்து மக்கள் ஆடித்தள்ளுப்படி பொருட்களை அதிக அளவில் வாங்க தொடங்கியுள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை அரசு, தனியார் அலுவலங்களுக்கு விடுமுறை என்பதால், மக்கள் குடும்பத்துடன் பொருட்களை வாங்க தி.நகர், புரசைவாக்கம் போன்ற பகுதிகளுக்கு படையெடுத்தனர்.

மாலையில் இந்த கூட்டம் வழக்கத்தை விட இரட்டிப்பானது. இதனால், தி.நகர் மக்கள் வெள்ளத்தில் திக்குமுக்காடிய காட்சியை காண முடிந்தது. எங்கும் மக்கள் தலைகளாக காட்சியளித்தன. அவர்கள் தங்களுக்கு தேவையான பேண்ட், சர்ட், சுடிதார், சேலை, வேஷ்டி உள்ளிட்ட துணிமணிகளை தேர்வு செய்து தள்ளுபடி விலையில் வாங்கிச் சென்றனர். வீட்டு உபயோகப் பொருட்களையும் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். அதே போல் எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனையும் அதிகரித்து காணப்பட்டது.

பொருட்களை வாங்கியவர்கள் அருகில் உள்ள சிறிய ஓட்டல்கள் உணவு சாப்பிடுவதற்காக குடும்பத்தினருடன் சென்றனர். இதனால், அங்கும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

மேலும் ஐஸ்ககிரீம், பழ ஜூஸ் விற்பனையும் களைக்கட்டியிருந்த காட்சியை காண முடிந்தது. அது மட்டுமல்லாமல் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சென்னை மெரினா, பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரை பகுதிகள் மற்றும் பூங்காக்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. குடும்பத்துடன் வந்து அவர்கள் பொழுதை கழித்தனர்.   

Related Stories: