×

2 அமைச்சர்கள் ராஜினாமா, தலா 3 துறையை கவனிக்கும் 5 அமைச்சர்கள்; ஒன்றிய அமைச்சரவை விரைவில் மாற்றம்?: பார்லி. கூட்டத்தொடர், துணை ஜனாதிபதி தேர்தலுக்காக காத்திருப்பு

புதுடெல்லி: ஒன்றிய அமைச்சரவையில் சமீபத்தில் இரு அமைச்சர்கள் ராஜினாமா செய்த நிலையில், விரைவில் அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. நாடாளுமன்ற கூட்டத் தொடர் மற்றும் துணை ஜனாதிபதி தேர்தல் முடிந்ததும், அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவையில் தற்போது 29 கேபினட்  அமைச்சர்கள் உள்ளனர். மேலும் 47 இணை அமைச்சர்கள், தனிப் பொறுப்புடன் கூடிய  இரண்டு இணை அமைச்சர்கள் உள்ளனர். இந்நிலையில் ஒன்றிய அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ஏற்படலாம் என பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து அந்த வட்டாரங்கள் கூறுகையில், ‘ஜனாதிபதி தேர்தல் முடிந்துள்ள நிலையில் ஆகஸ்ட் 6ம் தேதி துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. அதன்பின்னர் ஒன்றிய அமைச்சரவையில் மாற்றம் இருக்கும். சமீபத்தில் நடந்து முடிந்த மாநிலங்களவை தேர்தலின் போது ஏற்கனவே ஒன்றிய அமைச்சர்களாக இருந்த எஃகு துறை அமைச்சர் ஆர்சிபி சிங் (ஐக்கிய ஜனதா தளம்) மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி (பாஜக) ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

அதனால் அவர்கள் எம்பி தகுதியை இழக்க நேரிட்டது. அதனை தொடர்ந்து இருவரும் தங்களது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தனர். தற்போது அந்த இரு அமைச்சர்களுக்கான துறைகளான எஃகுத் துறை அமைச்சகத்தை ஜோதிராதித்ய சிந்தியாவும்,  சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகத்தை ஸ்மிருதி இரானியும் கூடுதலாக கவனித்து வருகின்றனர். வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்றும் ஒன்றரை ஆண்டுகளே உள்ளதால், தேர்தலை மையப்படுத்தி அமைச்சரவை விரிவாக்கம் இருக்கும். தற்போது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரும் நடப்பதால், அந்த கூட்டத் ெதாடர் முடிந்த (ஆக. 12) பின்னர் அமைச்சரவை விரிவாக்கம் இருக்கும். தற்போது சிவசேனாவின் அதிருப்தி கோஷ்டியினர் பாஜக கூட்டணியில் இணைந்துள்ளதால், அவர்களுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு கொடுக்கப்படும்.

அதேபோல், ஐக்கிய ஜனதா தளத்திற்கும் வாய்ப்பு அளிக்கப்படும். தற்போது தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் சில கட்சிகளுக்கு மட்டுமே கேபினட் அமைச்சர்கள் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை மாற்றம் நடக்கும்போது, கூட்டணி கட்சிகளுக்கும் வாய்ப்பு அளிக்கப்படும். அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறும் ேபாது, சுமார் 12 அமைச்சர்கள் இடம்பெற அதிக வாய்ப்புள்ளது. ஒன்றிய அமைச்சர்களில் தற்போது 5 அமைச்சர்கள் தலா 3 துறைகளை கவனித்து வருகின்றனர். அவர்களில் பியூஷ் கோயல், பிரஹலாத் ஜோஷி, சர்பானந்தா சோனோவால், அஸ்வினி வைஷ்ணவ், கிஷன் ரெட்டி ஆகியோர் அடங்குவர். எனவே, அவர்களிடம் இருந்து கூடுதல் துறைகளை மற்றவர்களுக்கு அளிக்க வாய்ப்புள்ளது’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Tags : Union ,Barley Conference ,Vice President , 2 ministers resign, 5 ministers looking after 3 departments each; Union cabinet reshuffle soon?: Barley Conference, wait for Vice President election
× RELATED தையல் தொழிலாளர்கள் சங்க ஆண்டு விழா