×

தோகைமலை, கடவூர் பகுதிகளில் ஆடி பட்ட நிலக்கடலை சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம்

தோகைமலை: தோகைமலை மற்றும் கடவூர் பகுதிகளில் மானாவாரி விவசாய நிலங்களில் ஆடி பட்ட நிலக்கடலை சாகுபடியை விவசாயிகள் ஆர்வமுடன் தொடங்கி உள்ளனர்.
கரூர் மாவட்டம் தோகைமலை மற்றும் கடவூர் பகுதிகளில் கடந்த மாதம் மழைபெய்யத் தொடங்கியது. இப்பகுதி விவசாயிகள் மழை இல்லாமல் தங்களின் நிலங்களில் சாகுபடி செய்வதில் ஆர்வம் இல்லாமல் இருந்து வந்தனர். இந்நிலையில் வருணபகவான் கருணையால் கடந்தமாதம் பெய்த மழையினை பயன்படுத்தி மானாவாரி விவசாயிகள் தங்களது நிலங்களில், முதல்கால உழவினை செய்து நிலங்களை உலர வைத்தனர். அதனைத்தொடர்ந்து சொற்ப அளவில் மழை பெய்ததால் ஆடிபட்டத்தில் பயிரிடக்ககூடிய நிலக்கடலை, எள், துவரை உட்பட பல்வேறு தானிய வகைகளை மானாவாரி நிலங்களில் தெளித்து சாகுபடி பணியை தொடங்கி உள்ளனர். இதில் பெரும்பாலான விவசாயிகள் நிலக்கடலை சாகுபடி செய்வதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆடி மாதத்தில் விதைக்கக் கூடிய நிலக்கடலை ஐப்பசி மாதக் கடைசியில் அறுவடைக்கு தயாராகி விடும்.

ஒரு ஏக்கர் மானாவாரி நிலத்திற்கு 40 கிலோ வரை விதை பருப்பு தேவைப்படும். தனியார் விதை கொள்முதல் கடைகளில் ஒரு கிலோ ரூ.130 க்கு விவசாயிகள் கடலை விதைகளை வாங்கி வந்து தங்களது நிலங்களில் விதைப்பதாகவும் கூறுகின்றனர். அரசு தரப்பில் வழங்கப்படும் விதைபருப்புகள் உடைக்காமல் வழங்குவதாகவும், 35 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை ரூ.3 ஆரயிம் மற்றும் இதனுடன் 20 கிலோ உரம் வழங்குவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். ஒரு மூட்டையில் உள்ள 35 கிலோ கடலையில் பருப்பை பிரித்து எடுத்தால் 17 கிலோ பருப்பு மட்டுமே வருவதாக கூறும் விவசாயிகள் அதிகளவில் தனியாரிடமே விதை பருப்பை பெற்று விதைப்பதாகவும் கூறுகின்றனர். மேலும் தற்போது விவசாய பணிகளுக்கு தொழிலாளர்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் பருப்பு விதைப்பதற்கு நவீன இயந்திரங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

ஒரு சில இடங்களில் விவசாயிகளே தங்களது நிலங்களில் கடலை பருப்பை விதைத்து வருகின்றனர். நவீன பருப்பு விதைக்கும் இயந்திரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,500 வரை ஊதியமாக கொடுப்பதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர். இதே இயந்திரத்தின் மூலம் ஊடு பயிராக துவரையும் விதைத்து வருகின்றனர். தொடர்ந்து மழை பெய்யும் என்ற நம்பிக்கையில் மானாவாரி விவசாயிகள் தங்களது நிலங்களில் பல்வேறு சாகுபடிகள் செய்து வருகின்றனர். விவசாயிகள் எதிர்பார்ப்பது போல் தொடர்ந்து மழை பெய்தால் சாகுபடி செய்த பயிர்களை பருவத்திற்கு அறுவடை செய்து விவசாயிகள் லாபம் பெறுவதற்கு வாய்ப்பாக இருக்கும் என தோகைமலை மற்றும் கடவூர் பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Audi ,Dogimalai ,Kadavur , Farmers are interested in cultivating groundnut grown in Thokaimalai and Kadavur areas
× RELATED ஜூலை, ஆகஸ்ட் மாதம் நடவுக்கு ஏற்ற...