×

இளையான்குடியில் பருத்திக்கு விதை ஆலை தொடங்க வேண்டும்; விவசாயிகள் வலியுறுத்தல்

இளையான்குடி: கோடிகளில் வர்த்தகம், ஆயிரக்கணக்கானோர் ஈடுபடும் பருத்திக்கு விதை பிரிப்பு ஆலை தொடங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இளையான்குடி தாலுகாவிற்கு உட்பட்ட வருவாய் கிராமங்களில் ஆண்டுதோறும் சுமார் 8 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு விளையும் பருத்தி அப்பகுதி பருத்தி விவசாயிகளிடமிருந்து, தனியார் கமிஷன் கடை வியாபாரிகள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அவ்வாறு கொள்முதல் செய்த பருத்தி திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர், திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் ஆகிய மாவட்டத்தில் உள்ள பஞ்சாலைகளுக்கு அனுப்பபடுகிறது.

சிவகங்கை மாவட்டத்தில் இளையான்குடி, பகுதியில் பருத்தி அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதுவரை இல்லாத அளவில் நடப்பாண்டில் ஒரு கிலோ விதையுடன் சேர்ந்த பஞ்சு விலை கிலோ ரூ.105 வரை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டது. சில சமயங்களில் விதை நீக்கப்பட்ட பஞ்சின் விலை அதிகமாக இருந்தாலும், விதையுள்ள பஞ்சு விலை கீழே குறைந்துவிடும். இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க சாலைக்கிராமம் பகுதியில் பருத்தியில் இருந்து பஞ்சு, விதைகளை தனித்தனியாக பிரித்தெடுக்கும், பருத்தி அரவை ஆலை தொடங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பருத்தி விதை உற்பத்தியால் நேரிடையாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு ஏற்படும்.

கால்நடை தீவனங்கள், மதிப்பு கூட்டிய பொருட்கள், பருத்திப் பால், தரமான இயற்கை விதை, உள்ளிட்ட அது சார்ந்த தொழில்கள் உருவாக வாய்ப்பு உள்ளது. அதனால் இளையான்குடி பகுதியில் பருத்தி விதை ஆலை தொடங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து உழவர் உற்பத்தி குழு உறுப்பினர்கள் கூறுகையில், ‘எங்கள் பகுதியில் 5,000 விவசாயிகளுக்கு மேல் பருத்தி சாகுபடி செய்கின்றனர். பஞ்சு விலை உயர்ந்தாலும் எங்களுக்கு பெரிய அளவு லாபம் கிடைப்பதில்லை. பஞ்சு, விதைகளை தனித்தனியாக பிரித்து மதிப்பு கூட்டி விற்கும்போது தான் விவசாயிகளுக்கு லாபம் ஏற்படும். அதனால் சாலைக்கிராமம் பகுதியில் பருத்தி விதை பிரிப்பு ஆலை தொடங்க அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : Ilayankudi , Cotton Seed Plant to be started at Ilayankudi; Farmers insistence
× RELATED இளையான்குடியில் கால்நடை கல்லூரி அமைக்க கோரிக்கை