×

இளையான்குடியில் கால்நடை கல்லூரி அமைக்க கோரிக்கை

இளையான்குடி, பிப்.23: இளையான்குடியில் கால்நடை மருத்துவ கல்லூரி அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இளையான்குடி பகுதி கால்நடை வளர்ப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர். இளையான்குடி வட்டாரத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக கால்நடை வளர்ப்பு மிக முக்கியமான தொழிலாக உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை, காளையார்கோயில் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி, நயினார்கோயில், ஆர்.எஸ்.மங்கலம் ஆகிய வட்டாரங்களுக்கு இளையான்குடி பகுதியே மையமாக செயல்படுகிறது.

இந்த பகுதியில் வீட்டுக்கு வீடு ஆடு, மாடு, நாட்டு கோழிகள் உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். மேலும் கால்நடை வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு இல்லாததால், அதனால் ஏற்படும் நன்மைகளான தொழில் மேம்பாடு, விற்பனை, சந்தைபடுத்துதல், பால் உற்பத்தி, ஆரோக்கிய உணவு ஆகியவை தெரியாமலேயே காலங்காலமாக கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் கால்நடைகளுக்கு ஏற்படும் மழை, வெயில் கால நோய்கள், பொதுவான நோய்கள், இயற்கையான முறையில் இனப்பெருக்க முறைகள் குறித்த வழிமுறைகள் தெரியாமலேயே உள்ளனர். தமிழகத்தில் இதுவரை பத்து கால்நடை மருத்துவமனை மற்றும் பராமரிப்பு கல்லூரிகள் மட்டுமே இயங்கி வருகிறது. ஆனால் கால்நடை வளர்ப்பில் தங்களது வாழ்வியலின் ஒரு அங்கமாக ஈடுபடும் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு கல்லூரியை ஏற்படுத்தவில்லை.

கால்நடை வளர்ப்பு, பால் உற்பத்தி, நாட்டுக்கோழி வளர்ப்பு ஆகியவற்றை அதிகப்படுத்தவும், வருங்கால கிராமப்புற மாணவர்கள் இது தொடர்பான படிப்பு மற்றும் ஆராய்ச்சியில் ஆர்வத்துடன் ஈடுபடவும், இளையான்குடியில் கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு கல்லூரியை அமைக்க, தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இளையான்குடி பகுதி கால்நடை வளர்ப்போர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post இளையான்குடியில் கால்நடை கல்லூரி அமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Ilayayankudi ,Tamil Nadu government ,Ilayankudi ,Sivagangai ,
× RELATED மதுரை மாநகராட்சியில் கால்நடை...