×

திருப்பாச்சேத்தி அருகே மின்வேலியில் சிக்கி ராணுவ வீரர், தந்தை, சகோதரர் பரிதாப பலி

திருப்புவனம்: திருப்பாச்சேத்தி அருகே மின்சாரம் தாக்கி ராணுவ வீரர், தந்தை, சகோதரர் பலியாயினர். தோட்டத்தில் மின்வேலி அமைத்திருந்த கரும்பு விவசாயியை போலீசார் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம், திருச்சுழி தாலுகா, தஞ்சாக்கூர் அருகே முகவூரை சேர்ந்த விவசாயி அய்யனார் (எ) அய்யங்காளை(58). இவரது மகன்கள் அஜீத்(26), சுந்தரபாண்டி (22). அஜீத் ராணுவ வீரர். இவரது மனைவி விஜயலட்சுமிக்கு குழந்தை பிறந்து 15 நாட்கள் ஆன நிலையில், குழந்தையை பார்ப்பதற்காக கடந்த 3 நாட்களுக்கு முன் விடுமுறையில் சொந்த ஊர் வந்தார். சுந்தரபாண்டி போலீஸ் வேலைக்கு தேர்வாகி உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் அய்யனார், அஜீத், சுந்தரபாண்டி மூவரும்  முயல் வேட்டைக்கு, மார்நாடு வயல்வெளி வழியாக சென்றனர். அப்பகுதியில் உள்ள கரும்பு தோட்டத்தில் காட்டுப்பன்றிகளை கொல்வதற்காக அமைக்கப்பட்டிருந்த மின் வேலியை மிதித்த மூவரும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர். போலீசார் வழக்கு பதிந்து விவசாயி முத்துக்குமாரை கைது செய்தனர்.

* மதுரையில் கனமழை மின்சாரம் தாக்கி 4 பேர் சாவு
மதுரை: மதுரையில் கனமழை எதிரொலியாக நேற்று இரு வேறு இடங்களில் மின்சாரம் தாக்கி 4 பேர் பலியாகினர். மதுரை, ஆண்டாள்புரம் மேற்கு தெருவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இங்கு உறவினர்களான எச்எம்எஸ் காலனியை சேர்ந்த முருகேசன்(52), ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த ஜெகதீசன்(38) ஆகியோர், மின்மோட்டார் அருகே இருந்தபடி தச்சு வேலை செய்தனர். மதுரையில் நேற்றிரவு இடியுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது இருவர் மீதும் மின்மோட்டாரில் கசிந்த மின்சாரம் தாக்கியது. இதில் அங்கேயே இருவரும் சுருண்டு விழுந்து உயிரிழந்தனர். மற்றொரு சம்பவம் : மதுரை, திடீர் நகர் பகுதியில் மேலப்பெருமாள் மேஸ்திரி வீதியில் ஒரு லாட்ஜ் அருகே, நேற்றிரவு அப்பகுதியைச் சேர்ந்த 50 வயதான ஒரு ஆண் மற்றும் 45 வயதான பெண் சாலையோர மின்கம்பத்தில் மின்சாரம் தாக்கி பலியாகினர். மின்னல் தாக்கியதில் இறந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Tags : Tirupachetty , Soldier, father, brother tragically lost their lives after getting caught in an electric fence near Tirupachetty
× RELATED திருப்பாச்சேத்தி அருகே 11ம் நூற்றாண்டு பைரவர் சிலை கண்டுபிடிப்பு