×

மதுரை அருகே பழமை மாறாமல் மண் பானையில் தீர்த்தம் சுமந்து வந்து கோயிலில் வழிபாடு; 500 கிடாய் வெட்டி ஊருக்கே விருந்து

மேலூர்: மேலூர் அருகே மண்பானையில் தீர்த்தம் சுமந்து வந்து கோயில் முன்பு ஒரே நேரத்தில் 560 குடும்ப உறுப்பினர்கள் பொங்கல் வைத்து விருந்து படைக்கும் திருவிழா நேற்று நடைபெற்றது. மதுரை மாவட்டம் மேலூர் அருகே சூரக்குண்டுவில் உள்ளது கருப்புச்சாமி கோயில். இக்கோயிலில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மிக சிறப்பாக விழா நடைபெறுவது வழக்கம். கடந்த 2 வருடங்களாக கொரோனா தடை காரணமாக தள்ளி சென்ற திருவிழா, 7 வருடங்கள் கழித்து இந்த ஆண்டு நடைபெற்றது.

மழை வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் கடந்த 800 வருடங்களாக இவ்விழா நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. 560 குடும்பங்களை சேர்ந்தவர்கள் ஆடி களரி என்ற பெயரில் இவ்விழாவை நடத்தி வருகின்றனர். இயந்திரமயமான இந்த கால சூழ்நிலையில், அரசு, தனியார் நிறுவனங்களில் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்கள், வெளிநாடுகளில் வசிக்கும் இந்த குடும்பங்களை சேர்ந்தவர்கள் எங்கு இருந்தாலும், இந்த விழாவிற்கு கட்டாயம் வர வேண்டும் என்பது இவர்களின் எழுதப்படாத சட்டம்.

இத்திருவிழா பாரம்பரிய முறைப்படி நேற்று நடந்தது. கருப்புச்சாமி கோயிலில் இருந்து மண்பானைகளை பெண்கள் சுமந்தபடி 2 கிலோ மீட்டர் தூரத்தில் காளியம்மன் கோயில் அருகில் உள்ள தீர்த்தத்தை (தண்ணீர்) எடுத்து மீண்டும் கோயிலை அடைந்தனர். பின் அங்கு ஒரே நேரத்தில் விறகு அடுப்பில் பொங்கல் வைத்தனர். பெண்கள் நடந்து வரும் போது, அவர்களால் பானையை சுமக்க முடியாமல் போனால், அவர்களின் கணவர்கள் அதை சுமந்து வர வேண்டும். ஆண்கள் கட்டாயம் மேல்சட்டை அணிய கூடாது. கோயிலுக்கு நேர்த்திக்கடனாக செலுத்தப்பட்ட 500க்கும் மேற்பட்ட கிடாய்களை இரவில் வெட்டி கறி விருந்து வழங்கப்பட்டது.  இந்த கறி விருந்தை ஆயிரக்கணக்கான மக்கள் இணைந்து உண்டனர்.

Tags : Madurai , Worshiping in the temple near Madurai without changing the ancient times, carrying the tirtha in an earthen pot; Cut 500 Kitai and feast in the town
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை